கவரைப்பேட்டை விபத்து சம்பவம் | ரயிலை கவிழ்க்க சதி என்ற பிரிவில் வழக்கு பதிவு


சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக, ரயிலை கவிழ்க்க சதி என்ற சட்டப்பிரிவில் தமிழக ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11-ம் தேதி பாக்மதி விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. 12 பெட்டிகள் தடம்புரண்டன. 19 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்த இடத்தில், என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி, மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.

இதற்கிடையில், தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு செய்ததுடன் அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை அறிக்கையை விரைவில் ரயில்வே துறைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதேபோல, தமிழக ரயில்வே போலீஸாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் மேற்பார்வையில் 3 டி.எஸ்.பி-கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இதுவரை 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விபத்துக்கு சதிவேலை நடந்திருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்தொடர்ச்சியாக, ரயிலை கவிழ்க்க சதி என்ற சட்டப்பிரிவில் தமிழக ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறியதாவது:

விபத்து நடைபெற்ற இடத்தில் அதாவது பிரதான பாதையில் இருந்து கிளை பாதைக்கு (லூப் லைன்) மாற்றக்கூடிய பாய்ன்ட்டில் போல்ட்டுகள், நட்டுகள் கழற்றப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை மாற்றி உள்ளோம். அதாவது, ரயிலை கவிழ்க்க சதி என்ற சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே சட்டத்தில் 150-வது சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக இதுவரை 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x