மதுரை மாநகர் மக்களுக்கான பட்டா பிரச்சினையை மார்க்சிஸ்ட் கட்சி உறுதியுடன் முன்னெடுக்கும்: மாவட்ட செயலாளர்கள்


மதுரை: மதுரை மாநகர மக்களுக்கான பட்டா பிரச்சினையை உறுதியுடன் முன்னெடுப்போம் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர்கள் மா.கணேசன் (மாநகர்), கே.ராஜேந்திரன் (புறநகர்) ஆகியோர் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள அரசு நத்தம் புறம்போக்கில் பல பத்தாண்டாக வசிக்கும் எளிய மக்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும்.

2011-ம் ஆண்டு மதுரை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட கிராம ஊராட்சிப் பகுதியில் சுமார் ஆறாயிரத்திற்கும் அதிகமானோருக்கு அரசு அனுமந்த பட்டா கொடுத்தது. இவர்களுக்கு தோராயப் பட்டா வழங்கி கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்திற்கு உட்பட்ட வீடுகளுக்கு பயனாளிகள் செலுத்த வேண்டிய தொகையை செலுத்திய பிறகும் அவர்கள் பெயரில் பத்திரம் பதிந்து கொடுக்காத நிலை உள்ளது.

இது பற்றி நடவடிக்கை எடுக்கவும், மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் நிலமற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் - புறநகர் மாவட்டக் குழுக்களின் சார்பில், கடந்த 7ம் தேதி முறையீடு இயக்கம் நடத்தினோம்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய, சு.வெங்கடேசன் எம்பி, புறநகர் பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கியதை நினைவு கூர்ந்து, மாநகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க புதிய புதிய அரசாணை தேவைப் படுகிறது அதற்காகவே இந்த முறையீடு போராட்டத்தை நடத்துகிறோம் என்றார்.

இது மார்க்சிஸ்ட் கோரிக்கை. இதில் தற்பெருமை, விளம்பரம் இல்லை. யாருடைய தனிப்பட்ட பெருமையை பறை சாற்றல்ல குடியிருக்க இடம் , பட்டா கேட்பது குற்றமல்ல. அவர்களை அணி திரட்டுவது எங்கள் கடமை.

பட்டா கிடைக்கும் என, பல ஆண்டாக நம்பியவர்கள், விதிகளை காட்டி அதிகார பீடங்களால் அலைக்கழிக்கப்பட்டோர் தான் எங்களை நம்பி வருகின்றனர். அவர்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் மார்க்சிஸ்ட்டுக்கு இல்லை.

திசை திருப்புவது எங்கள் நோக்கமல்ல. பல ஆண்டாக பட்டா பெற தகுதி, உரிமையும் இருந்தும் திசை தெரியாமல் திகைத்து நிற்கும் மக்களை ஆற்றுப்படுத்தி, அணி திரட்டுவதே எங்கள் கடந்த கால வரலாறு. நிகழ்கால திசைவழி அந்த மக்கள் பணியை மார்க்சிஸ்ட் கட்சி உறுதியோடு முன்னெடுக்கும். இவ்வாறு கூறியுள்ளனர்.

x