மதுரை: பட்டதாரி ஆசிரியருக்கு வழங்க வேண்டிய ஊதிய பாக்கியை வழங்கும் வரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஊதியத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் அழிமதுரையைச் சேர்ந்த ஆரோக்கிய அருள் தாமஸ் தாக்கல் செய்த மனு: நான் முதுகுளத்தூர் திருவரங்கம் புனித இருதய மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். நான் 4.4.2022-ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டேன். பணியிடை நீக்கம் திரும்ப பெறப்பட்டு 1.11.2022-ல் மீண்டும் பணியில் சேர்ந்தேன். இருப்பினும் எனக்கு நவம்பர் மாதத்திற்கு பிறகு ஊதியம் வழங்கவில்லை. எனது ஊதிய பாக்கியை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பள்ளி நிர்வாகம் மனுதாரருக்கான ஊதியப் பட்டியலை 3 வாரத்தில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். கல்வித்துறை அதிகாரிகள் மனுதாரருக்கு 1.11.2022 முதல் வழங்க வேண்டிய ஊதியத்தை 2 வாரத்தில் வழங்க வேண்டும் என 20.12.2023-ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி ஆரோக்கிய அருள் தாமஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்து நீதிபதி ஆர்.விஜயகுமார் பிறப்பித்த உத்தரவு: நீதிமன்ற அவமதிப்பு மனு விசாரணைக்கு வந்தபோது மனுதாரருக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது. அதன்பிறகும் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.
மனுதாரரின் ஊதியப் பட்டியலை வாங்கி வைத்துக் கொண்டு சம்பளம் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். அதற்கு ஒவ்வொரு காரணங்களை கூறி வருகிறார். ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நீதிமன்றத்தை துச்சமென மதித்து நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளார். எனவே பள்ளிக்கல்வி இயக்குனர் மனுதாரருக்குரிய ஊதியப்பாக்கியை வழங்கும் வரை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கான ஊதியத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.