பெரியகுளம்: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குளித்துக்கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாபயணிகளை வனத்துறையினர் அவசரமாக வெளியேற்றினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சிலதினங்களாக தொடர் மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கொடைக்கானல் மலையடிவாரப்பகுதியில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் கடந்த அக்டோபர் 12-ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது சுற்றுலாபயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. நீர்வரத்து சீரானதால் நேற்று முன்தினம் முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலாபயணிகள் குளிக்க அனுமதியளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் கும்பக்கரையில் மகிழ்ச்சியுடன் நீராடினர். பகல் 2 மணிக்கு மேல் கும்பக்கரை அருவில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்ததை வனத்துறையினர் கவனித்தனர்.
இதையடுத்து ரேஞ்சர் அன்பழகன் தலைமையிலான வனத்துறையினர், குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தினர். குளித்துக்கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக அருவியில் இருந்து வெளியேறினர்.
சுற்றுலாபயணிகள் வெளியேறிய சிறிதுநேரத்தில் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வனத்துறையினரின் கண்காணிப்பால் சுற்றுலாபயணிகள் ஆபத்தில் சிக்காமல் தப்பினர்.இதையடுத்து, கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு சீராகும் வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரேஞ்சர் அன்பழகன் தெரிவித்தார்.