தேவர் குருபூஜை, மருதுபாண்டியர் நினைவு தினத்தில் பழனிசாமி பங்கேகிறார்: செல்லூர் ராஜூ தகவல்


செல்லூர் கே.ராஜூ | கோப்புப் படம்

மதுரை: தேவர் குருபூஜை, மருதுபாண்டியர் நினைவு தின நிகழ்வில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியுள்ளார்.

அதிமுகவின் 53ம் ஆண்டையொட்டி, மதுரை பைபாஸ் ரோடு பகுதியிலுள்ள 3ம் பகுதி அதிமுக சார்பில், 53வது வார்டில் 53 அடி உயர கம்பத்தில் கொடியேற்றும் விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பங்கேற்று கொடியேற்றினார்.

பின்னர் அவர் பேசியதாவது: "இப்பகுதியில் எங்களது இயக்க கொடியை ஏற்ற போராடவேண்டியுள்ளது. ஆளுங்கட்சி அச்சுறுத்தலுக்கு பயப்படாமல், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்று கொடியேற்றப்பட்டுள்ளது. நீதிமன்ற சட்டத்திற்கு உட்பட்டு காவல்துறை அனுமதியுடன் இந்தநிகழ்வு நடக்கிறது. 2026ல் தமிழக மக்களுக்கான உண்மையான விடியல் ஆட்சியை அமைப்போம். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி மலர இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.

தமிழகத்தில் செயல்படாத அரசை நீக்கிவிட்டு எதிர்காலத்தில் நல்லதொரு ஆட்சியை அதிமுக அமைக்கும். பசும்பொன் தேவர் குருபூஜை, மருது பாண்டியர்களுக்கு வீர வணக்கம் செலுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகிறார். அவரது வருகை தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளோம். இதற்கு தொண்டர்கள், நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும்.

2026 தேர்தல் மதுரை மாநகரிலுள்ள 4 தொகுதிகள் உட்பட மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளை கைப்பற்றினோம் என்ற வரலாற்று சாதனையை படைக்கவேண்டும். இதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும்" என்று செல்லூர் ராஜூ கூறினார். இந்நிகழ்ச்சியில் வட்டசெயலாளர் வழக்கறிஞர் பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

x