திருவண்ணாமலையில் ஓராண்டுக்குள் ரூ.10 கோடியில் சர்வதேச ஹாக்கி மைதானம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி


திருவண்ணாமலை: ரூ.10 கோடி மதிப்பில் திருவண்ணாமலையில் ஓராண்டுக்குள் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 1,875 ஊராட்சி மன்றங்களுக்கு ‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்’ வழங்கும் விழா மற்றும் 803 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.78 கோடி கடன்உதவி வழங்கும் விழா திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது.

அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வரவேற்றார். விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கடனுதவி வழங்கி துணை முதல்வர் உதயநிதிபேசியதாவது:

கனமழைக்கு எதிரான செயல்பாடுகளுக்கு மக்கள் தமிழக அரசுக்கு முழுமையாக ஒத்துழைத்தனர். வட சென்னையில் 25 முதல் 30 செ.மீ. மழை பெய்தது. கனமழை பெய்த ஓரிரு நாட்களில் மழையின் சுவடே இல்லாதஅளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே அதிக வேலைவாய்ப்பு உள்ள மாநிலமாகவும், அதிக மகளிர் வேலைக்குச் செல்லும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. நாட்டில் வேலைக்குசெல்லும் பெண்களில் 43 சதவீதம்பேர் தமிழகத்தில்தான் உள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.16 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. தகுதியான அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும். அனைத்து துறைகளிலும் இந்தியாவுக்கு தமிழ்நாடு வழிகாட்டியாக விளங்குகிறது.

விளையாட்டு வீரர்களுக்கான அனைத்து குணங்களும், திறமைகளும் முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் இருந்தன. அதனால்தான், யாராலும் வீழ்த்த முடியாத அரசியல் வீரராக அவர் திகழ்ந்தார். திருவண்ணாமலையில் ஓராண்டுக்குள் ரூ.10 கோடி மதிப்பில் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைய உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

x