தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்களை நிரந்தரம் செய்யுங்கள்: ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளுக்காக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகின்றனர். அவர்களில் பலர் பணி நிலைப்பு கோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதாகவும், அதனால், அவர்கள் ஒரு மாதம் பணியாற்றினால், அடுத்த மாதம் பணி வழங்கக் கூடாது என்றும் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இது சமூகநீதிக்கும், மனித நேயத்துக்கும் எதிரானது.

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால்,பத்தாண்டுகள் பணி செய்த தற்காலிக, ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, நிரந்தரப்பணி கேட்பார்கள் என்பதற்காகவே கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கு வேலை வழங்கக்கூடாது என்பது எத்தகைய மனநிலை. இதுதான் திமுக கண்டுபிடித்திருக்கும் புதிய சமூக நீதியா என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கவேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை அரசுத்துறைகளில் டிஎன்பிஎஸ்சி, சீருடை பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் என தேர்வு முகமைகள் மூலமாக 32,774 நபர்களுக்கு அரசுதுறைகளில் நேரடி பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. இவைமட்டும் தான் நிரந்தரப் பணிகள் ஆகும். உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32,709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்காலிக, குத்தகை முறை பணியாளர்கள் ஆவர்.

ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே அரசுப் பணியாளர்களை ஒடுக்குவது, தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலை நிர்ணயம் செய்வது என தொழிலாளர் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் திமுக அரசு, இனியாவது அதன் அநீதிகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்குவதுடன், பத்தாண்டுகளை நிறைவு செய்த தற்காலிக தொழிலாளர்கள் அனைவருக்கும் உடனடியாக பணி நிலைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x