மதுரை: ‘‘கரோனாவை கண்டறிய ஏற்படுத்தப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனை ஆய்வகங்களை மற்ற நோய்களை கண்டறிவதற்கு பயன்படுத்துவதற்கு ஆராய்ச்சிகள் நடக்கிறது’’ என்று பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கடந்த காலங்களை ஒப்பிடும்போது தற்போது டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளன. எதிர்பார்த்ததைவிட இந்த ஆண்டு தற்போது உள்ள மக்கள் தொகையை ஒப்பிடும்போது மிக குறைவாகவே டெங்கு உள்ளது. மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவிற்கு டெங்கு பாதிப்பு ஏற்படவில்லை. பருவமழை சீசன் முடிந்த பிறகு டெங்கு காய்ச்சலும் தானாகவே குறைந்துவிடும். டெங்கு மட்டுமில்லாது அனைத்து வகை நோய்களிலும் என்ன பாதிப்பு ஏற்படுகிறது, மருத்துவமனைகளில் எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளை பாதிக்கிறதா, மரணங்கள் ஏற்படுகிறதா? என்பதை சுகாதாரத்துறை மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருகிறது.
கரோனா காலத்தில் தமிழகத்தில் மருத்துவக்கல்லூரிகளில் அதிகளவிலான ஆர்டிபிசிஆர் பரிசோதனை ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டன. நுண்ணுயிரியலாளர்கள், இந்த ஆய்வகங்களை பார்த்துக் கொண்டனர். தற்போது இந்த ஆய்வகங்கள் பயன்பாடு இல்லாமல் உள்ளன. இந்த ஆய்வகங்களில் சில தொழில்நுட்ப, மருத்துவ உபகரணங்களில் மாற்றங்களை செய்து மற்ற நோய்களை கண்டறியவதற்கு பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் நடக்கிறது. நோய்களை கண்டறியவதை விட, அந்த நோய்களுடைய வீரியம், தன்மை போன்றவற்றை கண்டறிவதற்கு இந்த ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை பயன்படுத்த முடிமா? என்றும் ஆராய்ச்சி செய்கிறோம். டெங்கு மட்டுமில்லாது அனைத்து வகை நோய்களையும் வருவதற்கு முன் தடுக்கவும், வந்தபிறகு கட்டுப்படுத்துவதற்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவ ஆராய்ச்சியாளர்களுடன் தமிழக பொது சுகாதாரத்துறையும் இணைந்து செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நோய்கள் வந்தபிறகு தடுப்பதை விட, அந்த நோய் வருவதற்கு முன்பே கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட ஹாட் ஸ்பாட் இடங்களை கண்டறிந்தும், தற்போது புதிதாக பரவும் இடங்களையும் கண்டுபிடித்து தடுப்பதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நோய் பாதிப்புகள் வராமல் தடுப்பபதற்கும், அதிகரிக்காமல் இருப்பதற்கும் பொதுமக்களுடைய பங்கு முக்கியமானது. தங்கள் வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அதனை பொதுமக்களே அழிக்கலாம். பொதுமக்கள் நோய்களுக்கு தாமே மருந்துகளை வாங்கி சாப்பிடக்கூடாது. மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் அனைத்து வகை நோய்களுக்கான சிகிச்சையும், பரிசோதனையும் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.