விரைவில் ஏபிஆர்ஓ காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்


அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

திருச்சி: செய்தி மக்கள் தொடர்புத்துறை உதவி அலுவலர்கள் (ஏபிஆர்ஓ) காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், நீதி கட்சித் தலைவர் சர் ஏ.டி.பன்னீர்செல்வம், பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோருக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் ஒரே இடத்தில் தனித்தனியே மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சில மாதங்களுக்கு முன் திறந்து வைத்தார்.

இந்நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அந்த மணிமண்டபங்களை பார்வையிட்டார். பின்னர் அங்கு நிறுவப்பட்டுள்ள மூவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியது: கிடப்பிலிருந்த இந்த மணிமண்டப பணிகளுக்கு தமிழக முதல்வர் உரிய நிதியை ஒதுக்கி பணிகளை முடித்து திறந்து வைத்தார். இங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்துள்ளோம். மணிமண்டபம் அருகில் உள்ள அரசு மதுபானக் கடை இடையூறாக இருக்கும்பட்சத்தில் ஆட்சியர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பார்.

திருச்சியில் சிவாஜி சிலை திறப்பு குறித்து மாவட்ட, மாநகராட்சி நிர்வாகமும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செய்தி மக்கள் தொடர்புத்துறை உதவி அலுவலர்கள் (ஏபிஆர்ஓ) காலிப்பணியிடம் குறித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி துறை உயர் அதிகாரிகள் பரிசீலித்து வருகிறார்கள். விரைவில் ஏபிஆர்ஓ காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். ஆய்வின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ராஜாராம், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், பழனியாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

x