புதுச்சேரி | சட்டப்பேரவைத் தலைவர் மரபுகளை மீறுவதை ஆளுநர் அனுமதிக்கக் கூடாது: அதிமுக வலியுறுத்தல்


புதுச்சேரி: சட்டப்பேரவைத் தலைவர் மரபுகளை மீறி நடப்பதை ஆளுநர் அனுமதிக்கக் கூடாது என்று புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அதிமுகவின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, "சென்னை பொதிகை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா மற்றும் ‘இந்தி மாத’ நிறைவு விழா தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடியபோது, ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகள் மட்டும் பாடப்படவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது சம்மந்தமாக ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் திமுக அரசுக்கு எப்போதெல்லாம் பிரச்சினைகள் வருகிறதோ அப்போதெல்லாம் ஆளுநர் அரசுக்கு எதிரான ஒரு செயல்பாட்டில் ஈடுபட்டு அந்த பிரச்சினையை திசை திருப்ப முயற்சி செய்கிறார். தற்போது மழை குறித்த பிரச்சினையில் இருந்து மக்களை திசை திருப்ப தமிழ்த்தாய் வாழ்த்து விவாகாரத்தை கையில் எடுத்து உள்ளனர். இது ஆளுநருக்கும், திமுகவுக்கும் இடையில் நடக்கும் நாடகமாகத்தான் தெரிகிறது.

1967-ல் இந்தி திணிப்புக்காக அறிஞர் அண்ணாவால் துரத்தி அடிக்கப்பட்ட காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக் கொண்டு இந்தி எதிர்ப்பு பற்றி பேசுவது திமுகவின் இரட்டை வேடம். இது தொடர்ந்து நீடிக்காது. வரும் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவர்கள்.

தமிழகத்தில் பாஜகவின் பி டீமாக திமுக உள்ளது. தமிழகத்தில் எப்படி திமுக இரட்டை வேடம் போடுகிறதோ அதுபோல் புதுச்சேரியில் உள்ள அக்கட்சியை சேர்ந்த எதிக்கட்சித் தலைவர் 4 வேடம் போடுகிறார். புதுச்சேரியில் போதைப் பொருள் விற்பனையால் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக அவர் கூறுகிறார். மது மற்றும் போதைப் பொருட்களால் இளைஞர்கள் சீரழிவதாக திமுகவின் எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது உண்மை என்றால் தான் நடத்தும் 10-க்கும் மேற்பட்ட மதுக் கடைகளை அவர் அரசிடம் ஒப்படைக்கத் தயாரா?

40 மாத கால திமுக ஆட்சியில் தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் ஏன் அங்கு என்கவுன்டர்கள் நடைபெறுகிறது? மது, போதை, சட்டம் - ஒழுங்கு இவற்றை பற்றி பேச திமுகவுக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை.

புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த சட்டப்பேரவைத் தலைவர் தொடர்ந்து மரபுகளையும், மாண்புகளையும் மீறி வருகிறார். அவர் கட்சி, ஆர்எஸ்எஸ் கூட்டங்களில் பங்கேற்கிறார். தினமும் முதல்வர் அறையில் அமர்ந்து கொண்டு, கோப்புகள் தொடர்பாக விளக்கம் கூற முதல்வரின் அறைக்கு வரும் அதிகாரிகளை தான் சட்டப்பேரவை தலைவர் என்பதை மறந்துவிட்டு சகட்டு மேனிக்கு கேள்வி கேட்டு வருகிறார். இவையெல்லாம் அதிகார துஷ்பிரயோகமாகும்.

அவரின் செயலை முதல்வர் தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சட்டப் பேரவைக்கு வெளியே நடக்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளுக்கும் தன்னை அழைக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

துணை நிலை ஆளுநர் தலைமையில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேரவைத் தலைவர் எப்படி எந்த சட்ட விதியின் கீழ் அழைக்கப்பட்டார் என அவரை அழைத்த அதிகாரிகளிடம் ஆளுநர் கேள்வி கேட்க வேண்டும். சட்டப்பேரவைத் தலைவர் மரபுகள் மீறி செயல்படுவதை ஆளுநர் அனுமதிக்கக் கூடாது." இவ்வாறு அவர் கூறினார்.

x