தேவர் ஜெயந்திக்கு முன் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்: விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உத்தரவு


ஆலோசனை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்திலிருந்து தேவர் ஜெயந்திக்கு செல்வோர் முன் அனுமதிபெற்று குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

117-வது தேவர் ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழா மற்றும் மருது சகோதரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், சிவகாசி சார்- ஆட்சியர் பிரியா, வருவாய் கோட்டாட்சியர்கள், டிஎஸ்பி-க்கள், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள், சமுதாய தலைவர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு: தேவர் ஜெயந்திக்கு செல்ல விரும்பும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் (5 நபர்களுக்கு மிகாமல்) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி மற்றும் வாகனத்திற்கான முன் அனுமதியை பெற்று அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து மரியாதை செலுத்த அனுமதிக்கப்படுகிறது. அனுமதி பெற விரும்புவோர் இம்மாதம் 23ம் தேதிக்குள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும்.

சொந்த வாகனங்கள் மூலம் செல்வோர் வாகன எண், வாகனத்தில் பயணம் செய்வோர் விவரங்களை 23-ம் தேதிக்குள் காவல்துறைக்கு தெரிவித்து வாகன அனுமதி சீட்டு பெறவேண்டும். சொந்த வாகனத்தை வாடகைக்கு விடக்கூடாது. வாகன தணிக்கையின் போது வாகனத்தில் வாகன உரிமையாளர் இருக்க வேண்டும்.

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலிருந்து புறப்படும் வாகனங்கள் அருப்புக்கோட்டை - காந்தி நகர் - ராமலிங்கா மில், கல்லூரணி, எம்.ரெட்டியபட்டி, மண்டபசாலை, கமுதி விலக்கு (கானாவிலக்கு) - கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே மீண்டும் திரும்ப வேண்டும்.

ஆவியூர், காரியாபட்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் கல்குறிச்சி, பாலையம்பட்டி பைபாஸ், காந்தி நகர், ராமலிங்கா மில், கல்லூரணி, கானாவிலக்கு, கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே மீண்டும் திரும்ப வேண்டும். திருச்சுழியிலிருந்து செல்லும் வாகனங்கள் ராமலிங்கா மில், கல்லூரணி, கானாவிலக்கு, கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே மீண்டும் திரும்ப வேண்டும்.

நரிக்குடியிலிருந்து செல்லும் வாகனங்கள் வீரசோழன் விலக்கு, பிடாரிசேரி, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் சென்றடைய வேண்டும். பின்னர் மீண்டும் திரும்பும்போது, பசும்பொன், கோட்டைமேடு. நகரத்தார் குறிச்சி, அபிராமம் வழியாக பார்த்திபனூர், பிடாரிசேரி, வீரசோழன் விலக்கு வழியாக வரவேண்டும்.’ இவ்வாறு இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

x