‘ரேஷனில் தரமில்லை, சாலை சரியில்லை...’ - சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனமும், மதுரை திமுக சலசலப்பும்!


மதுரை: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமாக இல்லை, சாலை சரியில்லை என்றால் கோபம் வருகிறவர்கள்தான் ‘எம்.பி-யை கண்டா வரச்சொல்லுங்க’ என்று சுவரொட்டி ஓட்டுகின்றனர். அதற்காக மக்களுக்கான போராட்டத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் பின்வாங்காது என சு.வெங்கடேசன் எம்.பி. பேசியது மதுரை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை ஊமச்சிகுளத்தில் மார்க்சிஸ்ட் சார்பில் நேற்று முன்தினம் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேசியதாவது: வண்டியூர் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை மாநாட்டின்போது எங்கள் கட்சியினர் பொதுமக்களின் கோரிக்கைகளை குறிப்பிட்டு பேனர் வைத்தனர்.

அதில், வண்டியூர் சாலை மோசமாக உள்ளது, சாலையைச் சீரமைக்க வேண்டும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரம் இன்றி, எடை குறைவாக உள்ளதாகவும், அரசு தலையிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

ரேஷன் கடையில் தரமான பொருள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தால், ஒருவருக்கு கோபம் வருகிறது. அது யாராக இருக்கும்? தரம் இல்லாத, எடை குறைவான பொருளை வழங்க காரணமானவராக இருக்கக்கூடும். அதற்கு எங்களுக்குப் பதிலடி கொடுப்பதாக நினைத்து ‘எம்பியை கண்டா வரச் சொல்லுங்க’ என சுவரொட்டி ஒட்டினர்.

நாங்க இங்கதான் இருக்கிறோம், அதுவும் வண்டியூரில்தான் இருக்கிறோம். ரேஷன் கடைக்கு வந்து சேருங்கள். இப்படி சுவரொட்டி ஒட்டிவிட்டார்களே என்பதற்காக, மக்களுக்கான போராட்டத்திலிருந்து மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் பின்வாங்காது. எங்களை விட சிறந்த போராட்டக் காரர்கள் இருந்தால் வாருங்கள், போட்டி போடலாம்.

பின்னால் இருந்துகொண்டு ஊர் பொது மக்கள் என்ற பெயரில்சுவரொட்டி ஒட்டி எங்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து, நீங்கள் அசிங்கப்பட்டு போகாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக அரசு மற்றும் திமுகவினரை குற்றம்சாட்டி எம்பி சு. வெங்கடேசனின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது, மதுரை அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

எம்பி பேசியதன் பின்னணி குறித்து திமுகவினர் கூறியதாவது: இதுவரை திமுக மற்றும் அரசு திட்டங்கள் குறித்து எம்.பி. இந்தளவுக்கு வெளிப்படையாக குற்றம் சாட்டியதே இல்லை.

தமிழக முதல்வருடன் மிக நெருக்கமான நட்பு வைத்திருப்பதால், பல விஷயங்களில் எம்பியின் செயல்பாடு நெருடலாக இருந்தாலும், நாங்கள் கண்டுகொள்வதில்லை. கூட்டணி தர்மத்துக்காகவும் விமர்சிப்பதில்லை. இந்தச் சூழலில்தான், கடந்த வாரம், மாநகர் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்க கோரி ஏராளமானோரை திரட்டி ஊர்வலம் நடத்தி ஆட்சியரிடம் எம்பி மனு அளித்தார்.

எதிர்க்கட்சியினர் கூட இப்படி செயல்பட்டதில்லை. துணை முதல்வர் உதயநிதி மதுரையில் 12 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கிச் சென்ற நிலையில், இந்த போராட்டத்தை எம்பி நடத்தினார். இது அரசுக்கு மட்டுமின்றி மதுரை திமுகவினருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது. அத்துடன் நிற்காமல், மார்க்சிஸ்ட் கட்சியினர் சார்பில் சாலை மோசம், ரேஷன் கடை குறைபாடுகள் குறித்து பேனராக வைத்தனர். இது திமுகவினரை மேலும் அதிருப்தியடையச் செய்தது.

இந்தச் சூழலில் எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக, பொதுமக்கள் என்ற பெயரில் ‘எம்பி-யை கண்டா வரச்சொல்லுங்க, ’ என்று சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதன் பி்ன்னணியில் திமுகவினர்தான் இருக்கிறார்கள் என நம்பும் எம்பி, சுவரொட்டிக்குப் பதிலடி தரும் வகையில் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், மதுரையில் திமுக, மார்க்சிஸ்ட் உறவில் விரிசல் அதிகரிப்பது நிச்சயம். ஏற்கெனவே துணை மேயர் நாகராஜனுக்கும், திமுகவினருக்கும் நல்ல உறவு இல்லை. தற்போது இந்தப் பட்டியலில் எம்பியும் சேர்ந்துள்ளார் என்றனர்.

x