கடலூர்: புவனகிரி அருகே வாய்க்காலில் மீன் பிடிப்பதற்காக வீசப்பட்ட வலையில் முதலைக் குட்டி ஒன்று சிக்கியது. வனத்துறையினர் அதனை மீட்டு பாதுகாப்பாக எடுத்துச் சென்று வக்காரமாரி குளத்தில் விட்டனர்.
புவனகிரி அருகே ஆதிவராக நல்லூர் கிராமத்தில் உள்ள வாய்க்காலில் மீன் பிடிப்பதற்காக இன்று காலை ஒருவர் வீசிய வலையில் எதிர்பாராத விதமாக 3 அடி நீளமுள்ள முதலைக் குட்டி ஒன்று சிக்கியது. இதனையடுத்து கிராம மக்கள் சிதம்பரம் வனத்துறைக்கு இது குறித்து தகவல் அளித்தனர்.
வனவர் பன்னீர்செல்வம், வனக்காப்பாளர் ஞானசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று வலையில் சிக்கிய 10 கிலோ எடை கொண்ட முதலைக் குட்டியை பத்திரமாக மீட்டு எடுத்துச் சென்று வக்காரமாரி குளத்தில் விட்டனர். வாய்க்காலில் வீசிய மீன்பிடி வலையில் முதலைக் குட்டி சிக்கிய விவகாரம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.