புதிய ஆவின் பால், விலை உயர்வுக்கு எதிர்ப்பு: ஆய்வு மட்டுமே நடைபெறுவதாக ஆவின் நிறுவனம் விளக்கம்


சென்னை: புதிய வகையான பால் மற்றும் விலை உயர்வு தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆய்வு மட்டுமே நடைபெறுவதாகவும், விற்பனை தொடங்கப்படவில்லை எனவும் ஆவின் விளக்கம் அளித்துள்ளது.

ஆவின், பச்சை நிற பாக்கெட் பாலின் பெயரை மாற்றி அதிக விலைக்கு விற்க உள்ளதாக தகவல் வெளியானதால், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தில் `ஆவின் கிரீன் மேஜிக்' என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் பச்சை நிற பாக்கெட் பாலில் உள்ள அதே 4.5 சதவீதகொழுப்புச் சத்து, 9 சதவீதகொழுப்பு அல்லாத திடப்பொருள்கள் கொண்ட பாலை `ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ்' என்ற பெயரில் திருச்சி மண்டலத்தில் ஆவின் அறிமுகம் செய்துள்ளது. கிரீன் மேஜிக் ஒரு லிட்டர் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 900 மிலி ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வண்ணத்தை மாற்றி பிளஸ் என்ற வார்த்தையை சேர்ப்பதற்காக ரூ.11 கூடுதலாக வசூலிப்பது பகல் கொள்ளையாகும். அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலைஅறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ஆவின் மூலம் விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டின் பெயரை `கிரீன் மேஜிக் பிளஸ்' என மாற்றி லிட்டருக்கு ரூ.11 கூடுதலாக உயர்த்த திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாலின் தரத்தை உயர்த்தாமல் பெயரை மட்டும் மாற்றி ஆண்டுக்கு ஒருமுறை மறைமுகமாக விலையை உயர்த்துவது கடும் கண்டனத்துக்குரியது. ஏழை, எளிய மக்களை நேரடியாக பாதிக்கும் பால் விலையை உயர்த்தும் முடிவைக் கைவிடுவதுடன், ஆவின் நிர்வாகத்தின் வருவாயைப் பெருக்கஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்நிலையில், ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட, அதாவது பச்சை நிற பாக்கெட் பால் விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த முடிவையும் எடுக்கவில்லை. மக்கள் நலன் கருதி எதிர்வரும் பால் தேவையை கருத்தில் கொண்டும், பால் சந்தையில் அனைவரும் விரும்பும் வகையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு, இதர கொழுப்புச் சத்துக்களை சற்று உயர்த்தி புதிய வகையான பாலை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பொதுமக்களிடம் கருத்துகளும் கேட்கப்படும். எந்த விதமான புதிய வகைப் பாலையும்இதுவரை ஆவின் நிறுவனம் விற்பனை செய்ய தொடங்கவில்லை. ஆவின் நிறுவனம் புதிய வகையான பால் வகைகளை விற்கத்தொடங்கும் பட்சத்தில் தெரிவிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

x