இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரி்க்க முயற்சி: ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு


இந்தி மாதம் கொண்டாட்ட நிறைவு விழா மற்றும் தூர்தர்ஷன் சென்னை தொலைக்காட்சி பொன்விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற, ஆளுநர் ஆர்.என்.ரவி ‘தர்ஷிகா’ எனும் இந்தி இதழை வெளியிட்டார். உடன் தூர்தர்ஷன் நிகழ்ச்சி துறை தலைவர் சீனிவாசன், துணை இயக்குநர் கிருஷ்ணதாஸ், செய்தி இயக்குநர் குருபாபு பலராமன், இந்தி அதிகாரி சுப்புலஷ்மி. படம்:ம.பிரபு

சென்னை: கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை, இந்தியாவில் இருந்து பிரிக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகத்தில் பொன்விழா, இந்தி மொழி மாதம் கொண்டாட்டங்களின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘தர்ஷிகா’ என்ற இந்தி இதழை வெளியிட்டார். பின்னர், அவர் பேசியதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து மொழியும் கொண்டாடப்பட வேண்டியவை. எனவே, இங்கு இந்தி மொழி திணிக்கப்படவில்லை. தமிழக மாணவர்கள் மத்தியில் இந்தி மொழி கற்க ஆர்வம் உள்ளது. மக்கள் இந்தி மொழியை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் உள்ள மொழிகளை அடிமைகள் மொழி என்றார்கள். இதற்கு பாரதியார் எதிர்ப்பு தெரிவித்தார். ஆங்கிலத்தை விட அறிவியல் ரீதியாகவும், கலாச்சாரம் ரீதியாகவும் தமிழ் சிறந்தது. ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டு சென்றாலும் ஆங்கில மொழிக்கு நாம் அடிமையாக இருந்தோம். அதனால் இந்தியாவின் மொழிகள் பெரிய அளவில் வளரவில்லை. பிரதமர் மோடியின் ஆட்சியின்கீழ் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ் பழமை வாய்ந்த மொழி. அதற்காக நாம் பெருமைப்படுகிறோம்.

கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் மக்கள் மத்தியில் விஷக் கொள்கைகள் பரப்பப்பட்டு உள்ளன. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து சமஸ்கிருதம் நீக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது.

தமிழுக்காக பிரதமர் மோடிபல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். தமிழக பல்கலைக்கழங்களில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கும் விதம் சிறப்பாக இல்லை. தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர். மற்ற அனைத்து மாநிலங்களிலும் மூன்றாவது மொழிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இந்தி திணிப்பு எனக்கூறி வேறு எந்த ஒரு மொழியும் வரவிடவில்லை. காரணம், அவர்கள் மற்ற மாநிலங்களிடம் இருந்து தமிழகத்தின் தகவல் தொடர்பை முறிக்க விரும்புகின்றனர்.

தமிழகத்தில் பெறப்படும் பிஎச்டி பட்டங்களில் ஒரு சதவீதம் கூட மத்திய அரசின் உயர்கல்வி ஆய்வுகளுக்கு எடுத்துகொள்ள முடியாத நிலையில் உள்ளன. இந்தியா வளரக் கூடாது என உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள சில நபர்கள் விரும்புகின்றனர். ஆனால், இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு ஆளுநர் கூறினார்.

இவ்விழாவில், தூர்தர்ஷன் நிகழ்ச்சி துறை தலைவர் சீனிவாசன், துணை இயக்குநர் கிருஷ்ணதாஸ், செய்தி இயக்குநர் குருபாபு பலராமன், இந்தி அதிகாரி சுப்புலஷ்மி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x