தமிழகத்தை அவமதிக்கும் ஆளுநரை திரும்ப பெறுங்கள்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்


சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் ‘திராவிட நல்திருநாடு’ என்ற வார்த்தை விடுபட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தை அவமதிக்கும் ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்தியஅரசை வலியுறுத்தியுள்ளார்.

தூர்தர்ஷன் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா மற்றும் அக்.18-ம் தேதியுடன் (நேற்று) நிறைவடையும் ‘இந்தி மாத’ நிறைவு விழா ஆகியவை நேற்று சென்னையில் நடைபெற்றது. இதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையேற்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாத விழாவை நடத்துவதை வருங்காலங்களில் தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்தச் சூழலில், நேற்று மாலை நிகழ்ச்சி தொடங்கியபோது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்கள், பாடலில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்..’ என்ற வரியில் ‘தெக்’ என தொடங்கி விட்டு அடுத்த வரிகளை பாடிமுடித்துவிட்டனர். இந்த நிகழ்ச்சியை நேரலையில் கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, திராவிட நல் திருநாடு என்ற வார்த்தை இடம்பெறாதது, கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆளுநரா? ஆரியநரா?. திராவிடம் என்ற சொல்லை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இ்ந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவு படுத்துகிறார் ஆளுநர்.

திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச்சொல்வாரா, தமிழகத்தையும் தமிழக மக்களின் உணர்வையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான தகவலில் தவறாக பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டிடி தொலைக்காட்சியை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தலைவர்கள் கண்டனம்

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது மாபெரும் தவறாகும். இச்செயல் பெரும் கண்டனத்துக்குரியது. திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி. தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிடப் பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்திருந்தாலும் கைவிட வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல. இனிவரும் காலங்களில் ஒத்திகை நடத்தப்பட வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தமிழ்த்தாய் வாழ்த்து திட்டமிட்டு அவமதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், அதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடு வரிவிடுபட்டது தொடர்பாக தமிழககாங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு கேட்ட தூர்தர்ஷன்: இந்நிலையில் இந்த விவகாரத்தில் டிடி தொலைக்காட்சி வருத்தம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்த்தாய் வாழ்த்தில் கவனக்குறைவாக ஒரு வரி விடுபட்டது. கவனச்சிதறலால் இது நிகழ்ந்துள்ளது. தவறுக்கு நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். தமிழ் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்யும் நோக்கம் பாடியவர்களுக்கு இல்லை. இந்த விஷயத்தில், தமிழக ஆளுநருக்கு நேர்ந்துள்ள சிரமத்துக்கும் மன்னிப்பு கோருகிறோம்.

முதல்வர் என் மீது இனவாத கருத்தை முன்வைப்பது மலிவானது: ஆளுநர்

ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட ட்விட்டர் பதிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின், எனக்கு எதிராக இனவாதக் கருத்தை தெரிவித்துள்ளார். அதில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை நான் முழுமையாக பாடுவேன் என்பதையும், அதை பக்தி சிரத்தையோடும் பெருமையோடும் துல்லியமாக பாடுவேன் என்பதும் தெரியும். பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அரசு தமிழ்மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை இந்தியாவுக்கு உள்ளேயும், உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வா் அறிவார். ஐநா சபைக்கும் கூட தமிழைக் கொண்டு சென்றார் பிரதமர் மோடி. ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில் நாட்டின் தொன்மையான, வளமான, உயிர்ப்புமிக்க மொழியான தமிழை பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன்.

சமீபத்திய நடவடிக்கையாக வடகிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அசாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுகாத்தி பல்கலைக்கழகத் தில் தமிழ்ப் பட்டயப்படிப்பு அறிமுகப்படுத்தப் பட்டது. ஒரு ஆளுநருக்கு எதிராக முதல்வர் இனவாத கருத்தை தவறான கருத்துகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதல்வரின் உயர் அரசியலமைப்பு பதவியின் கண்ணியத்தை குறைக்கும் வகையிலும் உள்ளது. தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதல்வர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

x