அமெரிக்காவில் விற்கப்பட்ட தீப நாயகர் கோயில் சிலையை மீட்க வேண்டும்: பொன் மாணிக்கவேல் புகார்


திருவாரூர் மாவட்டம் தீபநாயகர் கோயில் செப்புத் திருமேனி, அமெரிக்காவில் ரூ.2.34 கோடிக்கு விற்கப்பட்டதாகக் கூறி பொன்.மாணிக்கவேல் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

திருவாரூர்: அமெரிக்காவில் ரூ.2.34 கோடிக்கு விற்கப்பட்டுள்ள தீப நாயகர் கோயில் சிலையை மீட்க வேண்டும் என்று, குடவாசல் காவல் நிலையத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நேற்று புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டம் தீபங்குடியில் தீப நாயகர் என்ற சமண கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இருந்த, 76 செ.மீ. உயரம் கொண்ட தீப நாயகர் சுவாமியின் செப்புத் திருமேனி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோனது.

ஏற்கெனவே சிலை கடத்தல் வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்ற சஞ்சீவ் அசோகன் என்பவர்தான், இந்த சிலையை அமெரிக்காவுக்கு கடத்தியுள்ளார். ஆனால், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த சிலை சுபாஷ் சந்திரகபூர் என்பவரால் ரூ.2.34 கோடிக்கு 2019-ல் விற்கப்பட்டுள்ளது. தற்போது, நியூயார்க்கில் உள்ள தீப நாயகர் சிலை, ராஜீவ் சவுத்ரிஎன்பவர் வாயிலாக ஏலம் விடப்படஉள்ளது. இந்த ஏல நடவடிக்கையை தடுத்து நிறுத்தி, தீப நாயகர் சிலையை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தீப நாயகர் சிலை காணாமல் போனது குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்காதது அறநிலையத் துறை அதிகாரிகளின் தவறு. அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு திருட்டு சம்பவத்துக்கு முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்வதற்கு, ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரியான நானே சிரமப்பட வேண்டியுள்ளது. எனில், சாதாரண மக்கள் எவ்வளவு சிரமத்துக்கு உள்ளாவார்கள் என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது” என்றார்.

x