திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவில் பக்தர்கள் பாதுகாப்பாக வந்து செல்ல நடவடிக்கை - உதயநிதி உறுதி


திருவண்ணாமலையில் நடைபெற்ற கார்த்திகைத் தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அருகில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு. படம்: இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவில் பக்தர்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 18) இரவு நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி தலைமை வகித்தார். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வரவேற்றார். அனைத்து துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. டிசம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ள மகா தேரோட்டம் விழாவில் 6 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக பரணி மற்றும் மகா தீபம் ஏற்றப்படும் டிசம்பர் 13-ம் தேதி 40 லட்சம் முதல் 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள். பக்தர்கள் கூடும் இடங்களில் முதல்வரின் உத்தரவுப்படி கள ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் கார்த்திகை தீபத் திருவிழா குறித்து எடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து உயர்நிலை ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி அமைந்தது முதல், திருவண்ணாமலை மாநகரில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, மாநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் ரூ.30 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்தர்கள் எந்தவிதமான சிரமத்துக்கும் ஆளாக இருக்காமல் குடிநீர் வசதி, நடைபாதை வசதி, வடிகால் வசதி, சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்றுள்ளன.

மேலும் மக்களுடைய பாதுகாப்பு கருதி, முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால், முதலுதவி மையங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. 400 நடமாடும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்படும். கிரிவல பாதையில் பலர் அன்னதானம் வழங்குவார்கள் என்பதால், உணவு பாதுகாப்புத் துறை மூலமாக உணவின் தரத்தை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். மின் விளக்கு வசதிகள், தற்காலிக பேருந்து நிலையங்கள், பேருந்து சேவைகளும் ஏற்படுத்தி தரப்படும்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ரூ.30 கோடியில் மாஸ்டர் பிளானை முதல்வர் அறிவித்துள்ளார். கோயில் உள்ளே காத்திருப்பு மண்டபம், வளைவுகள், அன்னதான கூடங்கள், சமூக நல கூடங்கள், கோயில் குளத்தை தூர்வாரும் பணிகள் என ஏராளமான பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஏற்கெனவே பல பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதர பணிகளும் விரைவில் தொடங்கப்பட்டு, 6 மாதத்தில் நிறைவு பெறும். கோயில் கோபுரங்கள் மற்றும் விமானங்களில் ரூ.5 கோடியில் மின்னொளி வசதி ஏற்படுத்தி தரப்படும்.

சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மூலம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழு அனுப்பப்பட்டு பொதுமக்கள், பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் கார்த்திகைத் தீபத் திருவிழாவின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கருத்து கேட்கப்பட்டது. இந்த கருத்துகளின் அடிப்படையில் பல ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு பல வழிகாட்டு நெறிமுறைகள், துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தீபத் திருவிழா மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பக்தர்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்களின் குடிநீர் தேவையை போக்க, ஏற்கெனவே 6 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 6 குடிநீர் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

பொருத்திருந்து பார்க்கலாம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘திராவிட நல் திருநாடும்’ என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளதாக செய்திகளில் பார்த்துள்ளேன். இதை பெரிதுப்படுத்த விரும்பவில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என பொருத்திருந்து பார்க்கலாம். தமிழ்தாய் வாழ்த்து பாடும்போது சில சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வருத்தப்பட கூடாது என முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சில வரிகளை நீக்கி உள்ளார். ஆனால் அவர்கள், சில வார்த்தைகளை நீக்கி உள்ளனர். இதற்கு முதல்வர் பதிலளிப்பார்” என்றார்.

சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலாளர் தாரேஸ் அகமது, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஸ்ரீதர், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மக்களவை உறுப்பினர்கள் அண்ணாதுரை, தரணிவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சரவணன், கிரி, அம்பேத்குமார், ஜோதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

x