ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்வில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ சர்ச்சை: சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா மற்றும் ‘இந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இந்த விழாவில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடியபோது, ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகள் மட்டும் பாடப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர். திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழகத்தையும் - தமிழக மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்,” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
மன்னிப்புக் கேட்ட டிடி தமிழ் தொலைக்காட்சி: டிடி தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் போது, கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டு விட்டார். கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். தமிழையோ அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை. வேண்டுமென்றே இதனை யாரும் செய்யவில்லை. இது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் பதிலடி: தனது சமூக வலைதள பக்கத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவு: “முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். பிரதமர் தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார். பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழை கொண்டு சென்றார்.
ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அசாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஓர் ஆளுநருக்கு எதிராக முதல்வர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமானது. மலிவானது. இது, முதல்வரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது. தனது இனவாத கருத்துகள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதல்வர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
மோடிக்கு ஸ்டாலின் ‘எதிர்ப்பு’ கடிதம்: சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ‘இந்தி மாதம்’ நிறைவு நாள் விழா கொண்டாடப்படுவது எதிர்வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், “இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவது பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, “சென்னையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடப்பது அப்பட்டமான இந்தித் திணிப்பு முயற்சி” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டித்துள்ளார்.
“தமிழர்கள் எண்ணங்களில் 50 ஆண்டாக விஷம்...” - ஆளுநர்: சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா மற்றும் ‘இந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, “தமிழக மக்களின் எண்ணங்களில் 50 ஆண்டுகளாக விஷம் ஏற்றப்பட்டுள்ளது. இத்தகைய எண்ணங்கள், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து நமது மக்களை பிரித்துள்ளது. இந்த நிலத்தின் மிகவும் சக்திவாய்ந்த மொழி சமஸ்கிருதம். கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து தமிழகத்தைப் பிரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ், தமிழ் என்று கூறி இங்கே சத்தமிட்டுக் கொண்டிருப்பவர்கள் யாரும் தமிழுக்காக எதையும் செய்யவில்லை. சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தவர் பிரதமர் மோடி. ஆனால், இங்கிருக்கும் சிலர் வெறுமனே தமிழைப் பற்றி பேசிக் கொண்டும், அதை வைத்து அரசியல் செய்தும் வருகின்றனர். தமிழின் பெயரால் மக்களிடம் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றனர். இதுபோன்றவர்கள், நீண்ட நாட்களுக்கு வெற்றி பெற முடியாது. உலகின் பெருமையான மொழி தமிழ். அதற்காக ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் கொண்டாடப்பட வேண்டிய மொழிகள்தான்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
3% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 2024 ஜூலை 1ம் தேதி முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள். ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பச்சை நிற பால் விற்பனையை குறைக்க இல்லை’ - அரசு: ‘ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட பாலின், அதாவது பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. மக்கள் நலன் கருதி, எதிர்வரும் பால் தேவையை கருத்தில் கொண்டும் மற்றும் பால் சந்தையில் அனைவரும் விரும்பும் வகையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு மற்றும் இதர கொழுப்புச் சத்துக்களை சற்று உயர்த்தி புதிய வகையான பாலினை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சல்மான் கானுக்கு புதிய மிரட்டல்: லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடனான நீண்ட கால பகையை முடிக்க சல்மான் கான் ரூ.5 கோடி வழங்க வேண்டும் என்று ஒரு மிரட்டல் செய்தியை மும்பை போக்குவரத்து காவல் துறைக்கு லாரன்ஸ் கும்பலைச் சேர்ந்த ஒருவர் அனுப்பியுள்ளார். பணத்தை சல்மான் கான் கொடுக்கத் தவறினால், அவரது நிலைமை சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கைவிட மிகவும் மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யஹ்யா சின்வர் மரணத்தை உறுதி செய்த ஹமாஸ்: காசாவில் இஸ்ரேல் படைகளால் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டதை ஹமாஸ் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு, பாலஸ்தீனத்தை தனி நாடாக அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று ஹமாஸ் உறுதிபூண்டுள்ளது. மேலும், “காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தும் வரை மற்றும் முற்றுகையிடப்பட்ட பகுதியில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும் வரை காசாவில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் வீடு திரும்ப மாட்டார்கள்” என்று ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது.