உதகை மார்லிமந்து வனப்பகுதியை குத்தகைக்கு விட அதிமுக எதிர்ப்பு: விரைவில் போராட்டம் நடத்த முடிவு


உதகை: உதகை நகராட்சிக்கு உட்பட்ட மார்லிமந்து பகுதியில் 45 ஏக்கர் வனத்தை விவசாயம் செய்வதற்காக தனியாருக்கு குத்தகைக்கு விடும் நகராட்சியின் முடிவுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு சொந்தமான பகுதி மார்லிமந்து. இப்பகுதியில் 15 வார்டுகளுக்கான மார்லிமந்து நீர்தேக்கம் உள்ளது. சோலை வனமான இங்கு சுமார் 50 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு விவசாயம் செய்ய குத்தகைக்கு விட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக நகர்மன்றத்தின் ஒப்புதலுக்கு இது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டு கவுன்சிலர்களின் எதிர்ப்பால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இதே தீர்மானத்துக்கு ஒப்புதல் பெற முன்னறிவிப்பு இல்லாமல் அவசரக் கூட்டம் இன்று கூட்டப்பட்டது. இதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் கப்பச்சி டி.வினோத் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் வி.கோபாலகிருஷ்ணன் அதிமுக கவுன்சிலர்கள் ஹக்கீம் பாபு, குமார், அன்புச்செல்வன், ஜெயலட்சுமி, தனலட்சுமி ஆலோசனை நடத்தினர்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ''உதகை நகராட்சி நிர்வாகம் சீர்கெட்டு விட்டது. இதற்கு முக்கிய காரணம், தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் தான். நகரின் 15 வார்டுகளுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள மார்லிமந்து பகுதியில் சுமார் 50 ஏக்கர் வனப்பகுதியை திமுகவை சேர்ந்த தனி நபருக்கு குத்தகைக்கு விட முயற்சிகள் நடந்து வருகின்றன.

இப்பகுதியில் பல மரங்கள் உள்ளன. நகராட்சிக்கு வருவாய் தேவைப்படும் பட்சத்தில் மரங்களை வெட்டி விற்பனை செய்தாலே ரூ.5 கோடி வரை கிடைக்கும். இதை தவிர்த்து தனி நபருக்காக 3 ஆண்டுகளுக்கு சொற்பத் தொகையான ரூ.5 லட்சத்துக்கு ஏலம் விட முயற்சி நடக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும், உதகை நகரில் உள்ள ஆவின் பாலகங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.700 வாடகை நிர்ணயம் செய்யப்படவுள்ளது. இந்த பாலகங்கள் வைத்துள்ளவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஆவின் நிர்வாகத்துக்கு வாடகை செலுத்துகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய பகுதியான சேரிங்கிராஸில் நடைபாதை இல்லை. மக்கள் சாலையில் நடக்கும் நிலை உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் இல்லை.

உதகை நகரில் அடிப்படை வசதிகள் ஏதுவும் நிறைவேற்றப்படவில்லை. விதிமீறிய கட்டுமானங்கள் புற்றீசல் போல் பெருகி வருகின்றன. நகராட்சி நிர்வாகம் தூங்கிக் கொண்டிருக்கிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அதிமுக சார்பில் நகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தப்படும்.'' இவ்வாறு அவர்கள் கூறினார்.

இந்நிலையில், உதகை நகராட்சி தலைவர் எம்.வாணீஸ்வரி தலைமையில் இன்று நடந்த அவசர கூட்டத்தில், நகர்மன்ற ஒப்புதலுக்காக கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் ஒத்தி வைக்கப்பட்டன.

x