நகை பட்டியல் தாக்கல் செய்ய தாமதம்: திருவட்டாறு கோயில் செயல் அலுவலருக்கு ரூ.50,000 அபராதம்


மதுரை: தாமதமாக நகை பட்டியல் தாக்கல் செய்ததற்காக திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் செயல் அலுவலருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

குமரி மாவட்டம் திருவட்டாறு தங்கப்பன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை பாதுகாக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் கோயில் கலசத்தை பாதுகாக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், கோயில் கும்பாபிஷேகத்தின் போது பழைய கலசமும், தங்க ஆபரணங்களும் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை.

கோயில் தங்க ஆபரணங்கள், பழைய கலசம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டதற்கு, கடந்த 1992ல் இந்தக் கோயிலில் திருட்டு சம்பவம் நடைபெற்ற போது, கோயிலுக்குச் சொந்தமான தங்க அங்கி உள்ளிட்ட சில பொருட்கள் காணாமல் போயின. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. திருவட்டாறு கோயிலுக்குச் சொந்தமான பல தங்க ஆபரணங்கள், சிலைகள் எங்கு உள்ளது என்பது தெரியவில்லை.

இதுதொடர்பாக பலமுறை கேள்வி எழுப்பியும் முறையாக பதில் அளிக்கவில்லை. எனவே, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான தங்க சிவலிங்கம், பஞ்சலோக சிலைகள், பழைய கலசம் மற்றும் தங்க நகைகளை பழைய இடத்திலேயே மீண்டும் வைக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரி இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கெளரி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. கோயில் செயல் அலுவலர் ரத்தினவேல் பாண்டியன் நேரில் ஆஜராகி, புகைப்படத்துடன் அறிக்கை தாக்கல் செய்தார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: "கோயிலின் நகைகளின் பட்டியலை தாக்கல் செய்ய கடந்தாண்டு உத்தரவிட்ட நிலையில் செயல் அலுவலர் நேரில் ஆஜராக உத்தரவிட்ட பிறகு பட்டியலை தாக்கல் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத கோயில் செயல் அலுவலர் ரத்தினவேல் பாண்டியன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையருக்கு உத்தரவிடப்படுகிறது.

செயல் அலுவலருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இப்பணத்தை அவர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும். நீதிமன்றத்தில் அளித்த நகைகளின் பட்டியலின் படி, கோயில் நகைகள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும், கோயிலில் காணாமல் போனதாகக் கூறப்படும் தங்க சிவ லிங்கம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, விசாரணை ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

அவர் கோயிலின் பாதுகாப்பு அறையில் இருக்கும் நகைகளை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்டியலுடன் சரி பார்க்கவும், பத்மநாபபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருக்கும் நகைகள் குறித்தும் விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை அறநிலையத் துறை வழங்க வேண்டும்" என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.

x