மதுரை: மதுரையில் பார்க்கிங் வசதியில்லாமல் தீபாவளி ஷாப்பிங் செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்படும் நிலையில் பெரியார் பேருந்து நிலைய மல்டிலெவல் பார்க்கிங் திறக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் தீபாவளி வியாபாரம் களைகட்ட ஆரம்பித்துள்ள நிலையில் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு ஷாப்பிங் வரும் பொதுமக்களுக்கு வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதியில்லாமல் சிரமப்படுகிறார்கள். அதனால், பெரியார் பஸ்நிலையத்தில் கட்டி முடித்து மூடி வைக்கப்பட்டுள்ள மல்டிலெவல் பார்க்கிங்கை திறக்க மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும்.
மதுரை மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தேர்வானபோது, மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள மாசி, சித்திரை, வெளி வீதிகள், நேதாஜி ரோடு மற்றும் பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த சாலை கட்டமைப்பு வசதிகள், கம்பியில்லாத தடையற்ற மின்சாரம், சுத்தமான குடிநீர், பார்க்கிங் வசதிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனால் இந்தத் திட்டம் பற்றி மதுரை மாநகர மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளை தேர்வு செய்து ரூ.995.55 கோடியில் 14 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதில் முக்கியமானது மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் ஸ்மார்ட் சாலைகள், பாதாளச் சாக்கடை, மழைநீர் வடிகால் வசதிகளுடன் கூடிய திறந்தவெளி மின் கம்பம், பார்க்கிங் வசதி, மின் வயர்கள் இல்லாத 'ஸ்மார்ட் சாலைகளாக அமைக்கும் திட்டம்.
ஆனால், இதில் பல திட்டங்கள் இன்னும் செயல்பாட்டிற்கே வராததால் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம், மதுரை நகருக்கு மக்கள் எதிர்பார்த்த பொலிவை தரவில்லை. மாசி வீதிகள், வெளி வீதிகள், சித்திரை வீதி, நோதாஜி சாலை, பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில் போதுமான பார்க்கிங் வசதி இல்லாமல் நிரந்தரமாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கோயில் சுற்றுலாவையும், அதனை நம்பியுள்ள வர்த்தக வளர்ச்சியையும் நம்பியே மதுரையில் வேலைவாய்ப்பு உள்ளது. அதனால், மாநகராட்சி நிர்வாகம், மீனாட்சிம்மன் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில் நெரிசல் இல்லாமல் மக்கள் எளிதாக ஷாப்பிங் செல்வதற்கும், பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் எளிதாக கோயிலுக்குச் சென்று வரவும், பெரியார் பேருந்து நிலையம், மீனாட்சியம்மன் கோயில் வடக்கு ஆவணி மூல வீதி ஆகிய இடங்களில் மல்டி லெவல் பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தியது.
ஆனால், வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள மல்டி லெவர் பார்க்கிங் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. அதிலும் போதுமான வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியில்லை. விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் கோயிலுக்கு வருவோர் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் திண்டாடி வருகிறார்கள். பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள மல்டிலெவல் பார்க்கிங் இன்னும் திறக்காமல் மூடியே வைக்கப்பட்டுள்ளது.
தற்போது தீபாவளி பண்டிகை வியாபாரம் களைகட்டியுள்ள நிலையில் மதுரை மட்டுமில்லாது விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை போன்ற அண்டை மாவட்டங்களில் இருந்தும் புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், நகைகள் வாங்க அதிகளவு மக்கள் வருகிறார்கள். அதனால், விடுமுறை நாட்கள் மட்டுமில்லாது சாதாரண நாட்களிலும் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் திருவிழா கூட்டம் திரள்கிறது.
அப்படி வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் மாசி வீதிகளில் இரட்டை வரிசை பார்க்கிங் செய்கிறார்கள். மாநகர போக்குவரத்து போலீஸார், இரண்டாவது வரிசையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ரூ.500 அபாராதம் விதுப்பதுடன், சில வாகனங்களை எடுத்தும் செல்கிறார்கள். அதற்கு பயந்து தீபாவளி ஷாப்பிங் வரும் பொதுமக்கள், வாகனங்களை நிறத்த இடமில்லாமல் மாசி வீதிகளை சுற்றி வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
பலர், வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் ஏமாற்றத்துடன் தீபாவளி ஷாப்பிங் செய்யாமலேயே வைகை ஆற்றின் வடக்குப் பகுதியில் புதிதாக வந்துள்ள கடைகளுக்கு செல்கின்றனர். மக்கள் வாகனங்களை விடுவதற்கு இப்படியெல்லாம் சிரமப்படும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம், பெரியார் பேருந்து நிலையம் மல்டி லெவல் பார்க்கிங்கை திறக்காமல் இருப்பது புரியாத புதிராக உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தடையில்லாமல் பொருட்கள், புத்தாடைகள் வாங்கிச் செல்வதற்கு வசதியாக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பார்க்கிங் வசதியை மாநகராட்சி ஏற்படுத்திக் கொடுக்க முன் வர வேண்டும்.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் இந்திராணியிடம் கேட்டபோது, ''மாசி வீதிகளில் போக்குரவத்து நெரிசலை குறைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் பெரியார் பேருந்து நிலையம் மல்டிலெவல் பார்க்கிங்கை திறக்க ஏற்பாடு செய்யப்படும்'' என்றார்.