கும்பகோணம்: கும்பகோணம் மோதிலால் தெருவில் தனியார் விடுதி இயங்கி வந்தது. இந்த விடுதி நிர்வாகம் கடந்த ஜூலையில் ஒரு சிறுவனும் சிறுமியும் தங்குவதற்கு அறை வழங்கியுள்ளனர். ஆனால், அறைக்குள் சென்ற சிறிது நேரத்தில், அந்தச் சிறுமி உயிரிழந்தார்.
இது தொடர்பாகக் கும்பகோணம் மேற்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், கும்பகோணம் வருவாய்த் துறையினர், விதிமுறைகள் பின்பற்றாதது, கட்டிட உரிமங்கள் இல்லாதது தொடர்பாக வருவாய்த் துறையினர் கடந்த செப்டம்பர் 30ம் தேதி விடுதி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டனர். ஆனால், விடுதி நிர்வாகம், உரிய பதில் அளிக்காமல், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்தது. ஆனால், இந்த வழக்கை நீதிமன்றம் கடந்த 4ம் தேதி தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு பொது கட்டிட விதிகளின் படி, அந்த விடுதி இயங்க தடை விதிக்கப்பட்டு இன்று வட்டாட்சியர் சண்முகம் அந்த விடுதிக்கு சீல் வைத்தார். அப்போது அவருடன் கும்பகோணம் மேற்கு காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.