திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே சாலை வசதி இல்லாமல் கண்மாய் கரையை கிராம மக்கள் பாதையாக பயன்படுத்தி வந்தனர். தொடர் மழையால் கண்மாய்க் கரையும் சேறும், சகதியுமாக மாறியதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் ஊராட்சி ஒத்தப்பட்டி கிராமத்தில் 45 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தைச் சுற்றிலும் விளை நிலங்களாக இருப்பதால், இக்கிராமத்துக்கு சாலை வசதி இல்லை. இதனால் அவர்கள் வில்லூர் கண்மாய்க்குள்ளும், மழைக் காலங்களில் அக்கண்மாய் கரையையும் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வழியாகத் தான் தானிப்பட்டி, திருக்கோஷ்டியூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று படித்து வருகின்றனர்.
தற்போது அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கண்மாய்க்குள் தண்ணீர் பெருகியுள்ளது. இதனால் கிராமத்து மக்கள் போக்குவரத்துக்கு கண்மாய் கரையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், மழை காரணமாக அதுவும் சேறும், சகதியுமாக மாறியதால், மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பலரும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் உள்ள நிலையில், தங்களது கிராமத்துக்கு சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து தானிப்பட்டி ஒன்றியக் கவுன்சிலர் ராமேஸ்வரி நம்மிடம் கூறுகையில், ''இந்த கிராம மக்கள் கடந்த 60 ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு போராடி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
மழைக் காலங்களில் மக்களுக்கு உடல்நிலை பாதித்தால் ஆட்டோ, ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாது. பாதிக்கப்பட்டவர்களை கட்டிலில் வைத்து 2 கி.மீ தூரத்துக்கு தூக்கி செல்கிறார்கள். அப்பகுதி மக்களின் பாதைப் பிரச்சினை தீர மாவட்ட நிர்வாகம் உதவிக்கரம் நீட்ட வேண்டும்'' என்றார்.