சிவகாசி டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கல்: 3 குடோன்களுக்கு சீல்


சிவகாசி: சிவகாசியில் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் மூலம் தமிழகம், கார்நாடக பகுதிகளுக்கு அனுப்புவதற்காக சட்ட விரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த 3 குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சிவகாசி அருகே சித்துராஜபுரம் சசி நகரை சேர்ந்தவர் கூடலிங்கம்(39). இவர் சிவகாசி வேலாயுத ரஸ்தா சாலையில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவன முகவராக இருந்து வருகிறார். தற்போது தீபாவளி சீசன் என்பதால் பட்டாசு ஆர்டர்கள் வருவதால், அதே பகுதியில் தகர செட் அமைத்து தமிழகம், கர்நாடக பகுதிகளுக்கு அனுப்ப வேண்டிய ரூ.6 லட்சம் மதிப்புள்ள 420 பண்டல் பட்டாசு பார்சல்களை வைத்திருந்தார்.

நேற்று இரவு 10 மணி அளவில் பார்சல்களை லாரியில் ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வருவாய் ஆய்வாளர் காளிச்சரண், கிராம நிர்வாக அலுவலர் ஜெயபால், எஸ்ஐ-யான வெற்றி முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை செய்து, சட்ட விரோத பட்டாசு குடோனுக்கு சீல் வைத்தனர்.

அதைத் தொடர்ந்து சிவகாசி - விஸ்வநத்தம் சாலையில் உள்ள தெய்வானை நகரில் திருத்தங்கலைச் சேர்ந்த கருணை சோமசுந்தரம் என்பவருக்கு சொந்தமான டிரான்ஸ்போர்ட் நிறுவன குடோனிலும் அதிகாரிகள் சோதனை செய்தபோது அங்கு, ரூ.6 லட்சம் மதிப்புள்ள 216 பட்டாசு பார்சல்களை சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பட்டாசு குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதன்பின் அதே பகுதியில் உள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் என்பவருக்குச் சொந்தமான டிரான்ஸ்போர்ட் நிறுவன குடோனில் ரூ.1 லட்சம் மதிப்பிலான 72 பட்டாசு பார்சல்கள் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து அந்தக் குடோனுக்குக் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கடந்த மாதம் சிவகாசி கிழக்கு காவல் நிலையம் அருகே சட்ட விரோத டிரான்ஸ்போர்ட் நிறுவன குடோனில் வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து, அதிகாரிகள் டிரான்ஸ்போர்ட் நிறுவன குடோன்களை தீவிரமாக கண்காணித்து வருவது குறிப்பிடத் தக்கது.

x