சென்னை: கொளத்தூர் தொகுதியில் பருவமழை தொடர்பான பணிகளை நேற்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், ‘‘எங்கள் பணி மக்கள் பணி. விமர்சனங்கள் பற்றி கவலைப்படவில்லை’’ என்று தெரிவித்தார்.
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், கொளத்தூர்,வீனஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வெளியேற்றும் நிலையத்தில் ரூ.1.40 கோடி மதிப்பில் நடைபெறும் மழைநீர் வெளியேற்றும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். நீர்வளத் துறை சார்பில் ரூ.44 கோடிமதிப்பில் ரெட்டேரியை மேம்படுத்தும் பணிகள், ரூ.91.36 கோடியில் நடைபெறும் தணிகாசலம் உபரிநீர் கால்வாயை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
குமரன் நகர் சாலையில் உள்ள பாலாஜி நகரில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து,சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மக்களுக்கு முட்டை, ரொட்டி, பால் உள்ளி்ட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். பெரியார் நகர் கார்த்திகேயன் சாலையில் உள்ள திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், பெரம்பூர் செம்பியம் சிஎஸ்ஐ புத்துயிர் சிறப்பு பள்ளியில் பயிலும் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஜம்புலிங்கம் பிரதான சாலையில் உள்ள காமராசர் சத்திரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி,மழை கோட், புடவை, போர்வை, உள்ளிட்ட 10 பொருட்களை வழங்கினார். பிறகு, பிரியாணி, பொரித்த கோழி, மீன் ஆகியவற்றுடன் கூடிய மதிய உணவை பரிமாறி, அவர்களுடன் உணவருந்தினார்.
இந்த ஆய்வின்போது, செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது: ‘வெள்ள தடுப்பு திட்டங்கள் தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் அளித்த அறிக்கையை வெளியிடவில்லை. அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை’ என்கிறார் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி. எவ்வளவு பணிகள்நடந்துள்ளன என்பது மக்களுக்கு தெரியும். அவர்கள் திருப்தியாகஉள்ளனர். அதை அரசியலாக்குவதை நான் விரும்பவில்லை.
எங்களுக்கு தெரிந்து, சென்னையில் பெரும்பாலும் தண்ணீர் வடிந்துவிட்டது. தெரியாமல்சில இடங்களில் தேங்கி இருந்தாலும்கூட, உரிய கவனம் செலுத்திநடவடிக்கை எடுக்கிறோம்.
மாநகராட்சியின் பணி மிகவும் சிறப்பாக, பெருமைப்படும்அளவுக்கு மக்கள் பாராட்டும் அளவுக்கு இருந்துள்ளது. அதற்காக மாநகராட்சி அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, ஊழியர்கள், துப்புரவுபணியாளர்கள், பிற துறை அதிகாரிகளுக்கு நன்றி, வாழ்த்துகளை தெரிவித்துள்ளேன்.
சமூக வலைதளங்களிலும் நிறைய பாராட்டுகள் வருகின்றன. அதேநேரம், தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் விமர்சனமும் செய்கின்றனர். அதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் பணிமக்கள் பணி, அதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறோம். எந்த மழை வந்தாலும் சமாளிக்க அரசு தயாராக உள்ளது. அதற்கானபணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு முதல்வர் கூறினார்.
அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், எம்எல்ஏ சுதர்சனம்,மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.