ரயில் முன்பதிவுக்கான கால வரம்பு 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைப்பு: நவம்பர் 1-ம் தேதி அமல்


சென்னை: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பு 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படுகிறது. இந்த மாற்றம் நவம்பர் 1-ம் தேதி அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்ட சுற்றறிக்கை: ரயில்களில் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பு 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படுகிறது. இது நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனினும், 120 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி, அக்.31-ம்தேதி வரை அமலில் இருக்கும். ஏற்கெனவே செய்யப்பட்ட முன்பதிவுகளும் அப்படியே இருக்கும். இதுபோல, நவ.1-க்கு முன்பு முன்பதிவுசெய்த டிக்கெட்டை 60 நாட்கள் கடந்தும் ரத்து செய்ய அனுமதிக்கப்படும்.

குறிப்பிட்ட பகல் நேர விரைவு ரயில்களான லைம் தாஜ் விரைவு ரயில், கோம்தி விரைவு ரயிலில் முன்பதிவு செய்வதற்கான குறைந்த கால வரம்பில் மாற்றம் இருக்காது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 365 நாட்கள் என்ற வரம்பிலும் மாற்றம் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘முன்பதிவுக்கானகால வரம்பு 120 நாட்கள் இருப்பதால், பல நேரங்களில் டிக்கெட்டைரத்து செய்யாமல், பயணமும் செய்யாமல், சிலர் ஆள்மாறாட்டம், சட்டவிரோதமாகப் பணம் பெறுவது போன்ற மோசடிகளில் ஈடுபடுவதை தடுக்க முடியும். முன்பதிவு டிக்கெட்களை சிலர் பிளாக் செய்து, கூடுதல் விலைக்கு விற்பதும் தடுக்கப்படும். நேர்மையாக பயணிப்பவர்களுக்கு டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்’’ என்றனர்

x