உதயநிதி Vs இபிஎஸ் முதல் இந்திய அணி ‘மோசமான’ சாதனை வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


வெள்ளை அறிக்கை: உதயநிதி Vs இபிஎஸ்: “எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை கோரியிருக்கிறார். சென்னையில் தற்போது மழை நீர் எங்கும் நிற்காமல் உள்ளதே, அதுதான் வெள்ளை அறிக்கை” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். இதனை விமர்சித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் மழை மட்டும்தான் பெய்துள்ளது, அதற்கே இந்த அரசு மிகவும் அலறுகிறது, அதிமுக பல புயல்களை கண்டதுள்ளது. திருப்புகழ் கமிட்டி அறிக்கையின்படி எடுத்த நடவடிக்கைகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வெள்ளை அறிக்கை கேட்டால் முதிர்ச்சி இல்லாமல் பதில் அளிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். மழை நிவாரணப் பணிகளில் அனுபவம் பெற்ற அமைச்சர்களின் அறிவுரைகளை கேட்காமல், உதயநிதியை முன்னிலைப்படுத்தவே திமுக முயல்கிறது” என்று அவர் சாடினார்.

“விமர்சனங்கள் குறித்து கவலைப்படவில்லை” - முதல்வர்: சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை ஒட்டி எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், பணிகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். பின்பு, செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வரிடம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் அளித்த அறிக்கையை வெளியிடவில்லை, அதில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்று எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “இதை அரசியலாக்கும் முயற்சி செய்கின்றனர். எவ்வளவு பணிகள் நடைபெற்றுள்ளன என்பது மக்களுக்குத் தெரியும். எதிர்க்கட்சித் தலைவருக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதை அரசியலாக்கி வியாபாரப் பொருளாக்க நினைக்கின்றனர். அதை நான் விரும்பவில்லை,” என்றார். மேலும், “எங்கள் பணி மக்கள் பணி, நாங்கள் விமர்சனங்கள் குறித்து கவலைப்படவில்லை,” என்றார்.

குறைகிறது ரயில் டிக்கெட் முன்பதிவு கால வரம்பு: விரைவு, அதிவிரைவு ரயில் உள்பட பல்வேறு ரயில்களில் டிக்கெட் முன்பதிவுகளைப் பொறுத்தவரை, 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் முறை தற்போது உள்ளது. இந்த டிக்கெட்டை ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவும், ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து, பயணம் செய்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் முன்பதிவு செய்ய இந்த கால வரம்பு பயணிகளுக்கு வசதியாக இருக்கிறது. இந்நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவதற்கான கால வரம்பு 120 நாளில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படவுள்ளது. இது நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

6 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு: வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வெள்ளிக்கிழமை வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா முதல்வராக பதவியேற்றார் நயாப் சிங் சைனி! - பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார். இந்த விழாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 18 முதல்வர்கள் கலந்து கொண்டனர். மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணியின் பலத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த விழா நடைபெற்றது.

திருமண உறவில் பாலியல் வன்கொடுமை குற்றமா? - மனைவியுடன் கணவன் கட்டாய பாலுறவு கொள்வது அல்லது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமல்ல என பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 375, விதிவிலக்கு 2 கூறுகிறது. இந்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தீர்ப்பளிக்கக் கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கருணா நண்டி, ‘பாலுறவு செயலில் பெண்ணின் சம்மதம் மிகவும் முக்கியம்’ என வாதிட்டார். மேலும், ‘பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 375-ல் உள்ள விதிவிலக்கு 2, பெண்ணின் உரிமையை பறிக்கிறது. பாலியல் வன்கொடுமையால் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்பு, கணவனாக இருந்தாலும், வேறு நபராக இருந்தாலும் ஒன்றுதான்.

ஒரு பெண் லிவ்-இன் உறவில் இருந்தால், சம்மதமின்றி பாலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படுகிறது. ஆனால், ஒரு திருமணமான பெண் மீண்டும் மீண்டும் மிகக் கொடூரமான செயலுக்கு கணவனால் உள்ளானால் அது பாலியல் வன்கொடுமை அல்ல என்று சட்டம் கூறுகிறது. திருமண உறவில் இருக்கும் பாலியல் வன்கொடுமை விதிவிலக்கு, பாலின சமத்துவத்தை மீறுவதாக உள்ளது. பாலியல் வன்கொடுமையை பிஎன்எஸ் குற்றமாகக் குறிப்பிடுகிறது. ஆனால், கணவன் என்ற அந்தஸ்தின் அடிப்படையில் அதே குற்றத்தில் ஈடுபட்டால் அவரை முழுவதுமாக குற்றத்தில் இருந்து விலக்கி வைக்கிறது. எனவே, இதனை அரசியலமைப்புக்கு ஏற்ப கொண்டு வர வேண்டும்” என்று வாதிட்டார். முன்னதாக, இந்த விவகாரத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது. அதில், திருமண உறவில் பாலியல் வன்கொடுமையைக் குற்றமாக்குவது திருமண உறவுகளை பாதிக்கும்; கடுமையான இடையூறுகளுக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

“ட்ரூடோவின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது” - பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறியதற்கான ஆதாரம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறிய நிலையில், இது மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை என்று இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் குடியேற்ற நடைமுறை குறித்து கமலா கருத்து: “அமெரிக்காவின் குடியேற்ற நடைமுறைகளில் சிக்கல்கள் உள்ளன. அவை சரிசெய்யப்பட வேண்டும்” என்று அந்நாட்டு துணை அதிபரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

பாப் பாடகர் லியாம் பெய்ன் உயிரிழப்பு: விடுதியின் மூன்றாவது மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்து பாப் இசை பாடகர் லியாம் பெய்ன் உயிரிழந்தார். அவருக்கு வயது 31. ஒன் டைரக்‌ஷன் என்ற பாப் இசைக் குழுவின் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த லியாம் பெய்ன் பிரபலமானார். கடந்த 2008 முதல் அவர் இசைத் துறையில் இயங்கி வந்தார். இந்நிலையில், விடுதி ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்த தனது அறையின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து அவர் உயிரிழந்தார். இது தற்கொலையா அல்லது போதையில் தவறி விழுந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.

இந்திய அணியின் மோசமான சாதனை: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி. 11 பேட்ஸ்மேன்களில் இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். 5 பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்துள்ள குறைந்தபட்ச ரன்களாக இது அமைந்துள்ளது. இது ஆசிய மண்ணில் பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச ரன்களாகவும் உள்ளது. இதற்கு முன்னர் 53 ரன்கள் ஒரு அணி எடுத்ததே குறைந்தபட்ச ரன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

“புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் நானே பூட்டுப் போடுவேன்” - கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை உள்ளிட்ட இடங்களில் அரசு புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் நானே அந்தக் கடைகளுக்கு பூட்டுப் போடுவேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

x