நீதித் துறை, காவல் துறையில் இ-பைலிங் முறையாக பின்பற்றப்படுகிறதா? - பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு


மதுரை: நீதித் துறை, காவல் துறையில் இ-பைலிங் வசதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பது தொடர்பாக மாவட்ட நீதிபதிகள், ஐஜி-க்கள், காவல் ஆணையர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் வடமலையைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி கே.முரளிசங்கர், "மனுதாரர் வழக்கில் போலீஸார் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் அதை எதிர்த்து வழக்குத் தொடரலாம்" என உத்தரவிட்டார்.

இந்நிலையில் தற்போது வரை போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி ஜனார்த்தனன் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் குற்றப்பத்திரிகை இ-பைலிங் முறையில் ஏப்.22ல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மனுதாரர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி கே.முரளிசங்கர் பிறப்பித்த உத்தரவு: "கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக சமீபகாலங்களில் அதிகளவில் நீதிமன்றத்தில் சொல்லப்படுகிறது. இருப்பினும் வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் நீண்ட காலமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது தாமதப்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுகிறது.

வழக்கின் இறுதி அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்த வழக்குகள் மீண்டும் ஏன் விசாரணைக்காக எடுக்கப் படுவதில்லை என்பது தொடர்பான அறிக்கைகளை பெற்றபோது, இறுதி அறிக்கைகளில் உள்ள குறைகளை சரிசெய்ய மெமோ அனுப்பியும், நினைவூட்டல் வழங்கப்பட்டும் உரிய பதில் வராததால் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படாமல் இருப்பது தெரியவந்தது.

நீதிமன்றமும், காவல்துறையும் பொறுப்புணர்வை உறுதிப்படுத்தும் வகையில் இரு தரப்பிலும் இ-பைலிங் முறையை பின்பற்ற வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இரு தரப்பும் இ-பைலிங் முறையை பின்பற்றாமல் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்து கின்றனர். இந்த விவகாரத்தில் தவறை கண்டறியவும், செயல் திறனை மேம்படுத்தவும் இரு தரப்பிலிருந்தும் சில விவரங்களை பெற நீதிமன்றம் விரும்புகிறது.

எனவே, கடந்த ஓராண்டில் நீதித்துறை நடுவர் மன்றம் மற்றும் அமர்வு நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையில் எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கைகள், குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது? அதன் பிறகு எத்தனை வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது? விசாரணைக்கு எடுக்கப்படாமல் எத்தனை வழக்குகள் உள்ளன? தவறுகளை சரிசெய்வதற்காக எத்தனை வழக்குகளில் மெமோ அனுப்பப்பட்டது?

குறைகள் சரி செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை? என்பது குறித்து மதுரை உட்பட 14 மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதிகள், தென்மண்டல, மத்திய மண்டல ஐஜி-க்கள், மதுரை, திருச்சி, நெல்லை காவல் துறை ஆணையர்கள் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அக்.21-க்கு ஒத்திவைக்கப்படுகிறது" என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

x