புதுச்சேரி ரேஷன் கடைகளை பாப்ஸ்கோ நிறுவனமே நடத்த வலியுறுத்தி அக்.21-ல் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்


புதுச்சேரி: புதுச்சேரி ரேஷன் கடைகளை பாப்ஸ்கோ நிறுவனமே நடத்த வலியுறுத்தி அக்.21-ல் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஐடியுசி பாப்ஸ்கோ ஊழியர் முன்னேற்ற சங்க பேரவை கூட்டம் பாக்கமுடயான்பட்டு காரல் மார்க்ஸ் படிப்பகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பாப்ஸ்கோ ஊழியர் சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் சங்க செயல்பாடுகள், எதிர்கால இயக்கங்கள் சம்பந்தமாக விளக்கி பேசினார். ஏஐடியுசி மாநில கவுரவத் தலைவர் அபிஷேகம், பாப்ஸ்கோ ஊழியர் நலச்சங்க நிர்வாகிகள், செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் பிரபு உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

இன்றைய கூட்டத்தில், 2024 அக்டோபர் 15 அன்று குடிமைப் பொருள் வழங்கல் துறை பாப்ஸ்கோ நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 47 நியாயவிலைக் கடைகளை, புதுச்சேரி நியாய விலைக் கடைகளின் கூட்டுறவு சங்கத்திடம் (PFPSE) ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் பணிபுரியும் பாப்ஸ்கோ ஊழியர்கள் சுமார் 120 பேரின் (அலுவலகம் பணி மற்றும் கடை விற்பனையாளர்கள்) வாழ்வாதார நிலை என்ன என்பதை குறிப்பிடவில்லை.

இதேபோல் 1999ல் கான்பெட்டில் இயங்கி வந்த பொது விநியோக திட்டம், நியாய விலைக் கடை(PDS) பிரிவை பாப்ஸ்கோவிடம் ஒப்படைக்கும் போது புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மாஹேயில் பணிபுரிந்த கான்பெட் ஊழியர்களை பாப்ஸ்கோவிடம் ஒப்படைத்தார்கள். இதனைத் தொடர்ந்து பாப்ஸ்கோ நிறுவனம் மூலம் நியாய விலைக்கடை சிறப்பான முறையில் நடத்தி வரப்பட்டது.

அரசு நியாய விலைக்கடை மூலமாக வழங்கி வந்த அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணமாக செலுத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நியாய விலைக் கடைகள் திறக்கப்படாமல், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. இதற்கிடையே நியாய விலைக் கடைகளைத் திறந்து அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க பொதுமக்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் அரசு தற்போது நியாய விலை கடைகள் திறக்கப்பட்டு அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வரும் 21ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு மூன்று மாதம் ஊதியம் வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

முதல்வர், பாப்ஸ்கோ மூலம் நடத்தி வந்த நியாய விலைக்கடைகளை கூட்டுறவு நியாய விலைக் கடைகளிடம் ஒப்படைக்காமல் பாப்ஸ்கோ மூலமாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாப்ஸ்கோ ஊழியர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வேலை செய்வதற்கு தயாராக உள்ளார்கள். எனவே, முதல்வர் பாரபட்சம் பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஏஐடியுசி பாப்ஸ்கோ ஊழியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு வரும் 21ம் தேதி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

x