கடலூர்: பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்பே ஊதியம் வழங்க வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த மாதம் தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி கொண்டாட அதற்கான செலவுகளை மேற்கொள்ள உதவியாக நடப்பு அக்டோபர் மாத ஊதியத்தை தீபாவளிக்கு முன்பாகவே வழங்க வேண்டும். துணிமணி, பட்டாசு, பலகாரங்கள் வாங்க முன்கூட்டியே ஊதியம் வழங்கினால் அது எங்கள் குடும்பங்களுக்கு பேருதவியாக இருக்கும்.
கடந்த செப்டம்பர் மாத ஊதியத்துக்கான மத்திய அரசின் பங்களிப்பு தாமதமான போதும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உள்பட 32,500 பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் பெருமனதுடன் மாநில அரசு நிதியில் இருந்து ஊதியம் வழங்கி உதவினார். அதுபோல இதையும் இந்த நேரத்தில் செய்ய வேண்டும். மேலும், பண்டிகை முன்பணம் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்க ஆணையிட வேண்டும்.
முன்பணத்தை கடனாக வழங்கி அதனை மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து கொள்ள வேண்டும். தற்போது ரூ.12,500 தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் மேம்பட, திமுக தேர்தல் வாக்குறுதி 181-ஐ அரசாணையாக்கி, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து, தீபாவளி பரிசாக அறிவிக்க வேண்டும்" என்று செந்தில்குமார் கூறியுள்ளார்.