மூவரசம்பட்டு ஏரியில் 3 கி.மீ-க்கு ரூ.33.70 கோடியில் மூடு கால்வாய் அமைக்கும் பணி: அமைச்சர் ஆய்வு


மூவரசம்பட்டு ஏரி மூடு கால்வாய் பணியை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பரசன்.

மூவரசம்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு ஏரியிலிருந்து கீழ்க்கட்டளை கால்வாய் வரை ரூ.33.70 கோடி மதிப்பீட்டில் மூடு வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆட்சியர் அருண்ராஜ் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மழைக்காலத்தில் பல்லாவரம் மூவரசம்பட்டு ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கே.ஜி.கே. நகா், அன்பு நகா், பிருந்தாவன் காலனி, திருவள்ளுவா் நகா், அம்பாள் நகா் மற்றும் கீழ்க்கட்டளை குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்து அப்பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் வெள்ள பாதிப்புக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா்.

அதன் பேரில், இப்பிரச்சினைக்கு தீா்வு காணும் வகையில், நீா்வள ஆதாரத்துறை சாா்பில் ரூ.33.70 கோடியில் மூவரசம்பட்டு ஏரி முதல் மடிப்பாக்கம் ஏரி வரையிலும், அதைத்தொடர்ந்து மடிப்பாக்கம் ஏரியில் இருந்து கீழ்க்கட்டளை கால்வாய் வரை சுமாா் 3 கி.மீ தூரம், 3 மீட்டா் அகலம், 2 மீட்டா் ஆழம் கொண்ட மூடு கால்வாய் அமைக்கும் பணி கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை 40 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் பணிகளை முழுமையாக செய்து முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்பணியை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், ஆட்சியர் அருண் ராஜ் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகளிடம் பணி நடைபெறும் விவரங்களை அமைச்சர் கேட்டறிந்தார். பணிகளை விரைந்து முடிக்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, பல்லாவரம் எம்.எல்.ஏ கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

x