புதுச்சேரி போதை கலாச்சார நகரமாக உருவெடுத்துள்ளது: எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றச்சாட்டு


எதிர்க்கட்சித் தலைவர் சிவா

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் அரசு வெட்கப்படவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் மீண்டும் மாமுல் கேட்டு வியாபாரிகள் மீது தாக்குதல் நடக்கத் தொடங்கியுள்ளது. இது குறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: "புதுச்சேரி போதை கலாச்சார நகரமாக உருவெடுத்துள்ளது. இதனை கண்டு மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட உயர் ரக போதைப் பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன.

அதன் மூலம் இளம் சிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள் சீரழிவதும், போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் அப்பாவிகளை கொடூரமாக தாக்கும் செயல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. இந்திரா காந்தி சதுக்கம் அருகே அமைதியாக உட்கார்ந்து வியாபாரம் பார்க்கும் பெட்டிக்கடை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு அவரை சோடா பாட்டில்களால் கொடூரமாக ரவுடிகள் தாக்கியுள்ளனர்.

புஸ்ஸி வீதியில் நடந்து சென்ற பெண்களிடம் பட்டப் பகலில் கையில் இருந்த செல்போனை பறிந்துச் சென்றுள்ளனர். புதுச்சேரி மக்களை பதற வைக்கின்ற இதுபோன்ற சம்பவங்கள் புதுச்சேரி மாநிலத்தை மோசமான சூழ்நிலைக்கு கொண்டு செல்கிறது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் அதிகளவில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியில் இருந்தும் கொலை தொடங்கி, திருட்டு, போதைப் பொருள் விற்பனை என பல சம்பவங்களும் அதிகமாக நடந்தேறி வருவது கண்டு புதுச்சேரி அரசு வெட்கப்பட வேண்டும்.

காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகிறது. மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு நடவடிக்கையில் அரசு எந்த சமரசத்திற்கு இடமளிக்கக் கூடாது. ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ரவுடிகளையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். தவறு செய்வதற்கு ரவுடிகள் அஞ்சும் அளவிற்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

எந்தக் காவல் நிலைய எல்லையில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதோ அந்தக் காவல் நிலையத்தின் அதிகாரிகள் முதல் கடை நிலை காவலர் வரை பணியிடை நீக்கம் செய்யும் அளவிற்கு கடுமையான உத்தரவுகளை அரசு பிறப்பிக்க வேண்டும். எதிர்வரும் தீபாவளி பண்டிகையை வியாபாரிகள், வணிகர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமின்றி கொண்டாட தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறினார்.

x