பாகூர் ஏரியில் ஆய்வு மட்டும்தான் நடைபெறுமா?


புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் 2-வது பெரிய ஏரியாக பாகூர் ஏரி உள்ளது. இது விவசாய பாசனத்துக்கு பயன்படுவதுடன் பறவைகளின் சரணாலயமாகவும் விளங்குகிறது. 3.6 மீட்டர் உயரம் கொண்ட இந்த ஏரியின் சுற்றளவு 8.30 கி.மீ ஆகும்.

இந்த ஏரியில் 193.46 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும். இதன் மூலம் பாகூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங் கள் பாசன வசதி பெறுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரியைச் சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவ்வப்போது அரசு தரப்பில் இருந்து ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக துணைநிலை ஆளுநர்கள், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் என பலரும் வந்து இந்த ஏரியை ஆய்வு செய்துள்ளனர். தொடர்ந்து நடைபெறும் ஆய்வைத் தவிர, இந்த ஏரியில் வேறு எந்த ஒரு வளர்ச்சி பணிகளோ, மேம்பாட்டு பணிகளோ, திட்டங்களோ மேற்கொள்ளப்படவில்லை. ஏரியை தூர்வாருவது உள்ளிட்ட ஏரியின் அடிப்படை செயல்பாடுகள் கூட நடைபெறுவதில்லை.

இதுகுறித்து பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர் மற்றும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: பாகூர் ஏரி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன. அதன்பிறகு இன்று வரை தூர்வாரப்படவில்லை.

இடையில் வந்த பெரு வெள்ளங்களால் ஏரி அதன் கட்டமைப்பை இழந்துள்ளது. ஏரியைச் சுற்றியுள்ள 8 கி.மீ சாலையும் இதுவரை போடப் படவில்லை. ஏரியின் கலிங்கலில் பாலமும் கட்டப்படவில்லை. இதற்கு மத்தியில், ஏரியில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து வருகின்றன.

2016-ல் கிரண்பேடி புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு, பாகூர் ஏரிக்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் ஏரியைச் சுற்றி 3 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதன்பிறகு பாகூர் ஏரியில் வேறு எந்த பணிகளும் மேற் கொள்ளப்படவில்லை.

அவருக்கு பிறகு வந்த தமிழிசை மற்றும் இப்போதுள்ள துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உள்ளிட்டோர் பாகூர் ஏரியில் ஆய்வு செய்தனர். சமீபத்தில் ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் எழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியரும் வந்து பார்வையிட்டார். இவர்கள் எல்லாம் வந்து சென்ற பின்னர் எந்த ஒரு மேம்பாட்டு பணிகளோ, திட்டங்களோ, வளர்ச்சி பணிகளோ மேற்கொள்ளப்படவில்லை. வெறுமனே அவ்வப்போது ஆய்வு மட்டுமே செய்யப்படுகிறது.

மராமத்து பணிகள் நடக்காத நிலையில் ஏரியின் பரப்பளவு, கரைகளின் உறுதித்தன்மை குறைந்து வருகிறது. ஏரியினுள் ஆகாயத் தாமரை, செடிகள் படர்ந்து ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதன் காரணமாக ஏரியின் நீர்பிடிப்பு பகுதி குறைந்து வருகிறது.

ஆய்வு செய்வதை மட்டும் வாடிக்கையாக வைத்துக்கொள்ளாமல், ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு, ஏரியை மேம்படுத்த வேண்டும். ஆகாயத் தாமரை, தேவையற்ற செடிகளை அவ்வப்போது அகற்ற இயந்திரம் வாங்க வேண்டும். பாகூர் ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

x