நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க முடியாது: இபிஎஸ் திட்டவட்டம்!


சென்னை: கட்சி விரோத செயலில் ஈடுபட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் 53-வது ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கட்சி கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அதிமுக 1972-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது. இன்று அதிமுக 53-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நல்ல நாளை தமிழகம் முழுவதும், பிற மாநிலங்களிலும் கட்சி நிர்வாகிகள் எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திலும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதிமுக தொடங்கப்பட்டதால் தான் இந்திய அளவில் தமிழகம் வளர்ச்சி அடைந்து நிற்கிறது. அதிமுக ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதிக உறுப்பினர்களைக் கொண்டதும், 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த கட்சியும் அதிமுக தான்.

கடந்த 15-ம் தேதி பெய்த மழையால் சென்னை தத்தளித்தது. குறிப்பாக, ராயபுரம், புளியந்தோப்பு, பட்டாளம், மடிப்பாக்கம், மேடவாக்கம் முதல்வரின் தொகுதியான கொளத்தூர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக் காடானது. சென்னையில் 20 செமீ மழை பெய்தால்கூட ஒரு சொட்டு நீர்கூட தேங்காது என்று முதல்வர், அமைச்சர்கள், மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் 2022-ம் ஆண்டு தெரிவித்தனர். 2023-ம் ஆண்டும் அதையே தெரிவித்தனர். இன்று எல்லா இடத்திலும் மழை நீர் தேங்கி உண்மை நிலை வெளிவந்துவிட்டது.

அதிமுக ஆட்சியில் அடையாறு, கொசஸ்தலையாறு, கோவளம் ஆகிய வடிநிலப் பகுதிகளில் 2,400 கிமீ நீளத்துக்கு மழை நீர் வடிகால் அமைக்க உலக வங்கி மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கி உள்ளிட்ட வங்கிகளின் நிதி உதவியுடன் திட்டங்கள் தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு எஞ்சிய பணிகளை திமுக அரசு முறையாக நிறைவேற்றி இருந்தால் இன்று சென்னை இப்படி தத்தளித்து இருக்காது.

அதிமுக ஆட்சியில் கூவம், அடையாறு கரையோரம் வசித்த 13,750 குடும்பங்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டு, 30-க்கும் மேற்பட்ட நீர் வழித்தடங்கள் முழுமையாக தூர்வாரப்பட்டதால் அன்று வெள்ளம் தவிர்க்கப்பட்டது. திமுக ஆட்சியில் அதிமுகவின் பணிகளை தொடர்ந்து செய்திருந்தால் இன்று வெள்ளம் ஏற்பட்டிருக்காது.

வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்படுவதை தடுக்க திருப்புகழ் கமிட்டியை திமுக அரசு அமைத்தது. அதன் நோக்கமே சென்னையில் வெள்ள நீர் தேங்கக்கூடாது என்பதுதான். அவரின் பரிந்துரை என்ன, அதன் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். பெரு மழையால் சென்னையில் நீரே தேங்கவில்லை இதுதான் வெள்ளை அறிக்கை என முதிர்ச்சி இல்லாமல் துணை முதல்வர் உதயநிதி கூறுகிறார்.

அதிமுக ஆட்சியில் இதுபோன்ற வெள்ளம் ஏற்படும் போது பல்வேறு துறை அமைச்சர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டதால் வெள்ள பாதிப்பு எளிதாக எதிர்கொள்ளப்பட்டது. உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி களத்தில் நின்று பார்வையிட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.

இதேபோன்று இப்போது ஏற்பட்ட வெள்ளத்தின் போது நகர்ப்புற உள்ளாட்சித் துறை, மின் துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் களமிறங்கி இருந்தால் பிரச்சினை விரைவாக தீர்ந்திருக்கும். எல்லாமே துணை முதல்வர் உதயநிதி தலைமையில் தான் பணிகள் நடைபெற்றது. அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சர்கள் இருந்தும் உதயநிதி முன்னிலைப்படுத்தப்பட்டார்.

திமுக ஆட்சி இன்னும் 15 மாதங்கள் தான் உள்ளது. அதற்குள் இந்த அரசு என்ன செய்துவிட முடியும். முதல்வர் ஸ்டாலின் சென்னையில் ஐந்தாண்டு மேயராக இருந்திருக்கிறார். ஐந்தாண்டுகள் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்திருக்கிறார். அவருக்கு மழை நீர் தேக்கம் எங்கெங்கெல்லாம் ஏற்பட்டிருக்கும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

அதிமுக சார்பில் ரேப்பிட் ரெஸ்பான்ஸ் டீம் அமைத்திருக்கிறோம். பாதிப்புக்குள்ளானவர்கள் எப்போது வேண்டுமானாலும் அவர்களிடம் உதவி கோரலாம் என்று அறிவித்திருக்கிறோம். ஆனால், திமுக ஒன்றும் செய்யவில்லை. இது சாதாரண காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் ஏற்பட்ட மழை தான். புயல் இன்னும் வரவே இல்லை. அதிமுக பார்க்காத புயலே இல்லை. தானே, ஒக்கி, வர்தா, கஜா போன்ற புயல்களை அதிமுக அரசு சிறப்பாக எதிர்கொண்டிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்களுக்கு டீ வாங்கிக் கொடுத்து விட்டால் போதுமா? அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டாமா? கரோனா காலத்தில் கடுமையாக நேரம் காலம் பார்க்காமல் உழைத்த அவர்களை பணி நீக்கம் செய்திருக்கிறார். தூய்மைப் பணியாளர்கள் நலன் குறித்து பேச திமுகவினருக்கு தகுதியே இல்லை.

முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் கட்சி ஒருங்கிணைப்பு தொடர்பாக என்னை சந்தித்ததாக கூறப்படுவது பச்சைப் பொய். கட்சியில் இருந்து யாரும் பிரிந்து செல்லவில்லை. அவர்கள் மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் தான். அவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வாய்ப்பு இல்லை” இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, எஸ்.கோகுல இந்திரா, பா.வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

x