சென்னை மழை: 2 நாட்களில் 15.88 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டதாக தமிழக அரசு தகவல்


சென்னை: பெருமழை காரணமாக அக் 16,17 ஆகிய இரண்டு நாட்களிலும் நிவாரண முகாம்களில் 14.60 லட்சம் பேருக்கும், அம்மா உணவகங்கள் மூலம் 1.28 லட்சம் பேருக்கும் உணவு வழங்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: "சென்னை மாநகரை அச்சுறுத்திய சிவப்பு எச்சரிக்கை மழை அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநகரிலுள்ள அம்மா உணவகங்களில் 16, 17 ஆகிய இரண்டு நாள்களில் கட்டணமின்றி உணவு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மழை காரணமாக, வேலைக்குச் செல்லாத ஏழைகளுக்கு இந்த அறிவிப்பு பெரிதும் உதவியாக அமைந்தது. அதன்படி, அம்மா உணவகங்களில் நேற்று காலையில் இட்லி, பொங்கல் பிற்பகலில் பல்வேறு கலவை சாத உணவுகளும் வழங்கப்பட்டன.

காலை, மாலை இரண்டு வேளையும் 78,557 பேர் இலவச உணவை பெற்று பயனடைந்தனர். அதேபோல, மாலையில் 29,316 ஏழைகளுக்கு சப்பாத்தி வழங்கப்பட்டது. மழை காரணமாக, வேலையும் வருமானமும் இல்லாத நிலையில், இலவச உணவு வழங்க உத்தரவு பிறப்பித்த முதல்வருக்கு உணவு சாப்பிட்ட மக்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று நிவாரண பொருட்களை வழங்கினர். குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின் புளியந்தோப்பு பகுதியில் ஆய்வு செய்து, பணி மேற்கொண்டிருந்த சென்னை மாநகராட்சி முன்களப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கமளித்தார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மழை நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினார். அங்கு பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பெய்த பெருமழையால் சென்னை மாநகரில் 542 பகுதிகளில் மழைநீர் தேங்கத் தொடங்கியது.

அந்தப் பகுதிகளில் எல்லாம் ஏற்கெனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் பம்புகளை பயன்படுத்தி மழைநீர் தேங்கவிடாமல் செய்த மாநகராட்சி பணியாளர்களை முதல்வர் பாராட்டினார். தாழ்வான பகுதிகளில் குடியிருந்த மக்களை பாதுகாத்திட 300 நிவாரண மையங்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, குடிநீர் ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் 2 நாட்களிலும் 14,84,735 பேருக்கு உணவு விநியோகிக்கப்பட்டது. சென்னை மாநகரம் முழுவதிலும் 304 மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றில் 17,471 பேருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப் பட்டுள்ளன. சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதையிலும் மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது" என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

x