மழைநீர் வடிகால் பணிகளில் எத்தனை சதவீதம் நிறைவடைந்துள்ளது? - தமிழக அரசுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி


விருகம்பாக்கம் பகுதியில் பாஜக சார்பில், தனியார் மருத்துவமனையுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தார்.

சென்னை: விருகம்பாக்கம் பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக சார்பில், தனியார் மருத்துவமனையுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் பாஜக முன்னாள் மாநிலதலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு, மக்களுக்கு சிகிச்சை அளித்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜக தொண்டர்கள் அனைவரும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வுகளை விட்டுவிட்டு, இந்த நேரத்தில்பொதுமக்களுக்காக பணியாற்றவேண்டும். மக்கள் இந்த நேரத்தில்பாதுகாப்பாக இருக்க வேண்டும்.மழை காலத்தில் மற்ற கட்சியினரே களத்தில் இறங்கி பணியாற்றும் போது, ஆளும் கட்சிகள் களத்தில்இறங்கி பணியாற்றுவது அவர்களது கடமை. ஆனால், ஆளும் கட்சியைச் சார்ந்த துணை முதல்வர் களத்துக்கு வருவதே அரிதான காரியம்போல முன்னிறுத்துவது சரியல்ல.

தற்போது அதிகளவில் தண்ணீர் தேங்கவில்லை என்பது மகிழ்ச்சி. ரூ.4 ஆயிரம் கோடியில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளில்எத்தனை சதவீதம் நிறைவடைந் துள்ளது என்ற தகவல் மக்களுக்குமுழுமையாக சென்றடையவில்லை.

மழை வெள்ளம் வந்தால், சென்னை எந்த அளவுக்குப் பாதுகாக்கப்படும் என்பது குறித்து திருப்புகழ் அறிக்கை கொடுத்துள்ளார். அந்த அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டதா? அதற்கான தொலைநோக்கு திட்டம் வகுக்கப்பட்டதா? என்ற தகவலும் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

வேளச்சேரியில் கார்களை நிறுத்தும்போது, காவல் துறை அபராதம் விதித்தது. எங்களைப் போன்றோர் குரல் கொடுத்ததால், அபராதம் விதித்தது ரத்து செய்யப்பட்டது. ஆனால், தற்போது, வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்த, அரசே ஏற்பாடு செய்து கொடுத்ததுபோல தோற்றத்தை திமுகவினர் ஏற்படுத்தியுள்ளனர். கார்காலம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், கார் பாலம் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

x