சென்னை: ரேஷன் கடைகளில் பருப்பும், பாமாயிலும் தீபாவளிக்குத் தங்கு தடையின்றி வழங்கப்படும் என்றுஉணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்டோபர் மாதத்துக்கான துவரம் பருப்பு ஒதுக்கீடு 20,751 மெட்ரிக் டன்னில் நேற்று முன்தினம் அக்.15-ம் தேதி வரை 9,461 மெட்ரிக் டன் பருப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. 2.04 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் ஒதுக்கீட்டில் 97.83 லட்சம் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ளவை விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆதலால் தீபாவளிக்கு எவ்விதத் தட்டுப்பாடின்றி துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.