கோவையில் மழைநீர் வடிகாலுடன் கூடிய ரெடிமேடு கான்கிரீட் கட்டமைப்பு பணி தீவிரம் 


கோவை: அவிநாசி சாலை உப்பிலிபாளையம் சந்திப்பு அருகே, மழைநீர் வடிகாலுடன் கூடிய ரெடிமேடு கான்கிரீட் கட்டமைப்பு அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் அவிநாசி சாலை உப்பிலிபாளையம் சந்திப்பு முக்கியமானதாகும். இச்சந்திப்பிலிருந்து காந்திபுரம், டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம், தடாகம் சாலை, திருச்சி சாலை, அண்ணாசிலை சந்திப்பு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள், அவிநாசி சாலையை மையப்படுத்திய பகுதிகள் ஆகியவற்றுக்கு வழித்தடம் செல்கிறது. தினமும் ஏராளமான வாகனங்கள் இச்சந்திப்பு வழியாக சென்று வருகின்றன. மழை பெய்யும் சமயங்களில் இச்சந்திப்பில் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஏனெனில், நேரு மைதானம் அருகே, ஆடீஸ் வீதி, வஉசி மைதானத்தை ஒட்டியுள்ள சாலை உள்ளிட்ட இடங்களில் பெய்யும் மழைநீர் இறக்கமான சாலை காரணமாக இச்சந்திப்பை நோக்கி வந்து ஆறாக டிஎஸ்பி ஸ்டாப் வழியாகவும் செல்கிறது. தற்போது உப்பிலிபாளையத்தில் உயர்மட்டப் பாலத்துக்கான ஏறு மற்றும் இறங்குதளங்கள் கட்டப்பட்டு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இத்தளங்களின் மீது பெய்யும் மழைநீரும் வழிந்தோடி உப்பிலிபாளையம் சந்திப்பை நோக்கி வருகிறது. இதனால் இச்சந்திப்பில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.

ரெடிமேடு கான்கிரீட் கட்டமைப்பு: இதைத் தடுக்க, இச்சந்திப்பில் மழைநீர் வடிகால் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “ஆடிஸ் வீதியின் நுழைப்பாதையில் இருந்து, எதிரேயுள்ள சிஎஸ்ஐ சர்ச் கட்டிடம் வரை 30 மீட்டர் நீளத்துக்கு, 2.6 மீட்டர் அகலம், 2.6 மீட்டர் ஆழத்தில் குழி இன்று (அக்.16) தோண்டப்பட்டுள்ளது. இங்கு 2.6 மீட்டர் அகலம், 2.6 மீட்டர் உயரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ரெடிமேட் கான்கிரீட் கட்டமைப்புகள், கிரேன் இயந்திரம் மூலம் தூக்கி, சாலையில் தோண்டப்பட்ட குழியில் பொருத்தப்படும் பணி இன்று (அக்.16) இரவு தொடங்கப்பட்டது. ஓரிரு தினங்களில் இப்பணி முடிக்கப்படும்.

பணிகள் நிறைவுக்கு பிறகு பார்ப்பதற்கு சிறுபாலம் போல் இக்கட்டமைப்பு இருக்கும். ஆடீஸ் வீதி, உப்பிலிபாளையம் சந்திப்புச் சாலை, மேம்பால ஏறு மற்றும் இறங்குதளங்களின் மூலமாக சாலையில் வழிந்தோடி வரும் மழைநீர், வடிகால் வசதியுடன் கூடிய இந்த ரெடிமேடு கான்கிரீட் கட்டமைப்பு வழியாக வெளியேறி, டிஎஸ்பி பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள வடிகாலில் இணைந்து, அரசுக் கலைக்கல்லூரி வழியாக செல்லும் கால்வாய் வழியாகச் சென்று வாலாங்குளத்தில் கலக்கும். மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி ஆகியோர் இப்பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தியுள்ளனர்’’என்றனர்.

x