முன்னாள் ராணுவ வீரர் வாரிசுக்கு கடை ஒதுக்கீடு: கரூர் மாநகராட்சி வணிக வளாகத்தில் நீதிபதி ஆய்வு


கரூர்: முன்னாள் ராணுவ வீரர் வாரிசுக்கு கடை ஒதுக்கீடு தொடர்பாக கரூர் மாநகராட்சி வணிக வளாகத்தை நீதிபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூர் வேலுசாமிபுரத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. முன்னாள் ராணுவ வீரர் இவர். இரண்டாம் உலகப்போர், பர்மா போரில் பணியாற்றி பதக்கம் பெற்றுள்ளார். குமாரசாமியை கவுரவப்படுத்தும் வகையில் கரூர் நகராட்சியாக இருந்தப்போது கடந்த 2015ம் ஆண்டு அக்.31ம் தேதி அவரது வாரிசான பாக்கியத்திற்கு கரூர் மருத்துவமனை சாலையில் உள்ள வணிக வளாகத்தில் கடை ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கடை ஒதுக்கப்படவில்லை.

இதுதொடர்பாக 2017ம் ஆண்டு செப்.12 நகராட்சியிடம் பாக்கியம் மனு அளித்தார். மேலும், வணிக வளாகத்தில் பாக்கியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கடையை கடந்த 2018ம் ஆண்டு ஏல அடிப்படையில் வெறொருவருக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாக்கியம் வழக்கு தொடர்ந்தார். நகராட்சி தீர்மானம் அடிப்படையில் பாக்கியத்திற்கு கடையை ஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சப்பட்ட ஏல வாடகை, வைப்புத் தொகை, சொத்து மதிப்பு சான்று உள்ளிட்ட ஆவணங்களை வழங்கினால் கடை ஒதுக்கீடு செய்யப்படும் என 2018ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி நகராட்சி தெரிவித்தது. இதையடுத்து அனைத்து ஆவணங்களையும் பாக்கியம் ஒப்படைத்த நிலையிலும் 6 ஆண்டுகளாக கடை ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில் மேற்கண்ட கடையை பொது ஏலம் விடுப்படுவதாக மாநகராட்சி அண்மையில் அறிவிப்பு வெளியட்டது.

இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாக்கியம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நீதிபதி நேரில் சம்பந்தப்பட்ட இடத்தினை பார்வையிட்டு தள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

கரூர் ஆஸ்பத்திரி சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாக க ட்டிடத்தில் உள்ள மேற்கண்ட கடையை இன்று (அக். 16ம் தேதி) கரூர் குற்றவியல் நடுவர் நீதிபதி பரத்குமார் நேரில் தள ஆய்வு செய்தார். அப்போது பாக்கியம், அவர் மகன் மோகன சுந்தரம் ஆகியோரிடம் நீதிபதி பரத் குமார் விபரங்களை கேட்டறிந்தார். கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

x