பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்கு கேரள அரசு தொடர்ந்து இடையூறு: ஆய்வு பணியை புறக்கணித்த தமிழக அதிகாரிகள்


முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய வந்த துணை கண்காணிப்புக் குழுவிடம் அணை பராமரிப்பின் அவசியம் குறித்து விளக்கிய தமிழக நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள்.

கூடலூர்: உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் உத்தரவையும் மதிக்காமல் கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள விடாமல் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது. இதனைக் கண்டித்து துணை கண்காணிப்பு குழுவின் அணை ஆய்வுப் பணிகளை தமிழக அதிகாரிகள் புறக்கணித்தனர்.

முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில் அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றம் கண்காணிப்புக் குழு மற்றும் இதற்கு உதவியாக துணை கண்காணிப்புக் குழு ஆகியவற்றை நியமித்தது. துணை கண்காணிப்புக் குழு அணையை அவ்வப்போது ஆய்வு செய்து கண்காணிப்புக் குழுவுக்கு அறிக்கையை தாக்கல் செய்யும். இதன் தலைவராக மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் உள்ளார்.

தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு அணை சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் ஜே.சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் த.குமார், கேரள பிரதிநிதிகளாக நீர்ப்பாசன செயற்பொறியாளர் லெவின்ஸ் பாபு, உதவி பொறியாளராக கிரண்தாஸ் ஆகியோர் உள்ளனர். இக்குழு அணையை இன்று (அக்.16) ஆய்வு செய்யவந்தது. அவர்களை சந்தித்த தமிழக பிரதிநிதிகள் குழுவிடம் அணை பராமரிப்பில் கேரள அரசு செய்து வரும் இடையூறு குறித்த விவாதத்தில் ஈடுபட்டது.

இதில், அணையின் உபரிநீர் வழிந்தோடிகள், கேலரி உள்ளிட்ட பகுதிகளில் 13 முக்கிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. இதற்கான கட்டுமானப் பொருட்களை அணைக்குள் எடுத்துச் செல்ல கேரள நீர்வளத் துறையினர் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர். நேரிலும், பலமுறை கடிதம் மூலமும் அனுமதி கோரியும் தட்டிக்கழித்து வருகின்றனர்.

இந்த விவரங்கள் கண்காணிப்புக் குழு தலைவர், இருமாநில அரசு செயலர்களுக்கும் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்புக் குழு கூட்டம் குமுளியில் நடந்த போது கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல 3 நாட்களுக்குள் அனுமதி வழங்க கேரள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் 6 மாதமாகியும் கண்காணிப்புக் குழுவின் உத்தரவைக் கூட அவர்கள் ஏற்கவில்லை என்று தமிழக பிரதிநிதிகள், துணை கண்காணிப்புக் குழு தலைவர் மற்றும் கேரள பிரதிநிதிகளிடம் விவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு கேரள அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் ஒப்புதலின் பேரிலே அனுமதி அளிக்க வேண்டியதுள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கும். தற்போது அணையை ஆய்வு செய்வோம் என்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக பிரதிநிதிகளான கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார் ஆகியோர் அணை ஆய்வுப் பணியை புறக்கணித்தனர். மேலும் மாலையில் குமுளியில் நடந்த துணை கண்காணிப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்திலும் இவர்கள் பங்கேற்கவில்லை. இதற்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இது குறித்து தமிழக விவசாயிகள் கூறுகையில், "உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அணையைப் பலப்படுத்த விடாமல் கேரள அதிகாரிகள் தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றனர். கட்டுமானப் பொருட்களையும் அணைக்குள் கொண்டு செல்ல அனுமதிப்பது இல்லை. இந்நிலையில் சம்பிரதாயமாக நடைபெறும் அணை ஆய்வை தமிழகம் புறக்கணித்தது சரி தான். அணை பராமரிப்பில் கேரளா இன்னமும் இடையூறு செய்தால் அடுத்தடுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர்.

x