மழைநீர் தேங்கும்போது வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல கோவை சுரங்கப் பாதைகளில் எச்சரிக்கை கம்பங்கள்!


கோவை சிவானந்தா காலனி ரயில்வே சுரங்கப் பாதையில் நெடுஞ்சாலைத் துறையினரால் பொருத்தப்பட்ட எச்சரிக்கைக் கம்பம். 

கோவை: மழைநீர் தேங்கிய சமயத்தில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல, சுரங்கப் பாதைகளில் எச்சரிக்கை கம்பங்கள் பொருத்தும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாநகரில் சிவானந்தாகாலனி அருகே, லங்கா கார்னர் அருகே, காட்டூர் காளீஸ்வரா மில் அருகே, கிக்கானி பள்ளி அருகே ஆகிய இடங்களிலும், வடகோவை மற்றும் உப்பிலிபாளையம் மேம்பாலங்களின் கீழ் பகுதிகளிலும் சுரங்கப் பாதைகள் செல்கின்றன. இவ்வழியாக தினமும் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். கோவை மாநகரில் தொடர்ச்சியாக சில மணி நேரங்கள் மழை பெய்தால் மேற்கண்ட ரயில்வே சுரங்கப் பாதைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. மழைக் காலங்களில் இதில் வாகனங்கள் சிக்கிக் கொள்வதும் தொடர்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட சாயிபாபா காலனிக்கு செல்லும் வழியில் உள்ள, சிவானந்தா காலனி அருகேயுள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் அடிக்கடி சிக்கிக் கொண்டன. தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து பயணிகளை மீட்டு, கிரேன் உதவியுடன் பேருந்துகளை மீட்டனர். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க நெடுஞ்சாலைத் துறையினரால் எச்சரிக்கை கம்பங்கள் பொருத்தப்படுகின்றன.

இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறும்போது,"மழைக்காலங்களில் சுரங்கப் பாதைகளில் தேங்கிய நீரின் அளவு தெரியாமல், ஆபத்தை உணராமல் செல்வதால் வாகனங்கள் சிக்கிக் கொள்கின்றன. குறிப்பாக தற்போது வரும் பேருந்துகளின் தளங்கள் தாழ்வாக இருப்பதும் சிக்கிக் கொள்வதற்கு முக்கிய காரணமாகும். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க முதல்கட்டமாக சிவானந்தாகாலனி ரயில்வே சுரங்கப்பாதையில் ஒளிரும் பட்டையுடன் கூடிய எச்சரிக்கை கம்பம் பொருத்தப்பட்டுள்ளது. இக்கம்பம் 12 அடி கொண்டதாகும். 2 அடி மண்ணில் புதைக்கப்பட்டுள்ளது.

முதல் 1 அடி பச்சை நிறத்திலும், 1-ல் இருந்து 2-வது அடி வரை ஆரஞ்சு நிறத்திலும், 2 முதல் 10 அடி வரை சிகப்பு நிறத்திலும் வர்ணம் பூசப்பட்டிருக்கும். சுரங்கப் பாதையின் தாழ்வான பகுதியில் இருபுற வழி்த்தடத்திலும் இக்கம்பம் பொருத்தப்பட்டிருக்கும். மழைநீர் தேங்கிய சமயத்தில், இக்கம்பத்தில் பச்சை நிறம் தெரிந்தால் வாகன ஓட்டிகள் தயக்கமின்றி செல்லலாம். ஆரஞ்சு நிறம் தெரிந்தால் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.

சிகப்பு நிறம் தெரிந்தால் செல்லக்கூடாது. இன்று (அக்.16) இக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. வர்ணம் காய்ந்தவுடன் ஒளிரும் பட்டை பொருத்தப்படும். அடுத்தக்கட்டமாக பன்னிமடை - கணுவாய் வழித்தடத்தில் உள்ள தரைப்பாலத்தில் இக்கம்பம் பொருத்தப்படும். தொடர்ந்து தேவைப்படும் இடங்களில் இக்கம்பங்கள் பொருத்தப்படும்" என்று அதிகாரிகள் கூறினார்.

x