மதுரை; "அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள்" என்று சட்டசபை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் விமான நிலைய சாலையில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தொகுதி எம்எல்ஏ-வும் சட்டசபை எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார், இந்த மேம்பாலம் பணி நடக்கும் பகுதியை ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, தொடர்ந்து சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக கோரிக்கை விடுத்தார். மாவட்ட அவைத் தலைவர் முருகன், நகரச் செயலாளர் விஜயன், ஒன்றிய செயலாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மேம்பாலம் நடக்கும் பகுதியில் உள்ள திருமங்கலம் ரயில்வே கேட் பகுதிகளில் சேரும், சகதியுமாக இருப்பதால் இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் கடுமையாக சிரமம் அமைந்துள்ளனர். தற்போது கூட சேரும் சகதிமாக இருக்கிறது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினேன். அவர்கள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள்.
மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ-க்கள் கூறும் பணிகளுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை. தற்போது ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி மிகவும் மோசமாக உள்ளது. கோழிக்கு கூட போட முடியவில்லை. பருப்புகள், எண்ணெய் ஆகியவை கிடைக்கவில்லை. மின் கட்டணத்தை மூன்று முறை உயர்த்தி விட்டார்கள். ஆனால் அதிமுக ஆட்சியில் 8 ஆண்டு காலமாக மின் கட்டணத்தை ஒரு பைசா கூட உயர்த்தப் படவில்லை" என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.