தூத்துக்குடி உப்பாறு ஓடையில் குவிக்கப்பட்டுள்ள தாமிர கழிவுகளை அகற்றக் கோரி வழக்கு


மதுரை: தூத்துக்குடி உப்பாறு ஓடைகளில் குவிக்கப்பட்டுள்ள தாமிர கழிவுகளை அகற்றக்கோரிய வழக்கில் அரசு தரப்பி்ல் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜசேகர் சுப்பையா, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்: "தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையின் 3.50 லட்சம் டன் கழிவுகள் தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை பாலத்தின் அருகே 50 மீட்டர் உயரத்திற்கு கொட்டப்பட்டுள்ளது. கோரம்பள்ளம் கால்வாய், உப்பாறு ஓடைகளிலும் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் 2015ல் கனமழை பெய்த போது தாமிர கழிவுகளால் கால்வாயில் வெள்ள நீர் செல்ல முடியாததால் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்தது.

இதனால் அந்தோணியார்புரம், ஐயனடைப்பு, கோரம்பள்ளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து உப்பாறு ஓடையில் கொட்டப்பட்ட தாமிர கழிவுகளை 4 மாதத்திற்குள் அகற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் கழிவுகள் அகற்றப்படவில்லை. இதனால் 2023 கனமழையின் போதும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து 30 பேர் உயிரிழந்தனர்.

உப்பாறு ஓடையில் தாமிர கழிவுகளை கொட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஸ்டெர்லைட் நிர்வாகம் அனுமதி பெறவில்லை. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பெரும் அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன்பாக உப்பாறு ஓடை மற்றும் கோரம்பள்ளம் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள காப்பர் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில் இதே கோரிக்கை தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவை ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுவுடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிடவும், அரசு தரப்பில் தரப்பில் விபரங்கள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை அக்.23க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

x