குமரி அழிக்காலில் கடல் சீற்றம்: வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததால் மக்கள் அவதி


நாகர்கோவில்: குமரி மாவட்டம் அழிக்காலில் நள்ளிரவில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் இருந்து குமரி கடல் பகுதி கடும் சீற்றமாக காணப்பட்டது. குறிப்பாக ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அழிக்கால் பிள்ளைதோப்பில் கடலில் கடல் சீற்றம் ஏற்பட்டு வழக்கமான மணல்பரப்பை தாண்டி அலைகள் வெளியே வந்தது. நள்ளிரவு நேரத்தில் எழுந்த பேரலையால் கடல் நீர் அழிக்கால் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது.

இதில் அழிக்கால் நடுத் தெரு, கிழக்குத் தெரு, மேற்குத் தெரு பகுதிகளில் உள்ள 70-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. அலையின் வேகத்தில் மணலை அரித்தவாறு கடல் நீர் வீடுகளில் தேங்கியது. இதனால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியில் வெளியே ஓடினர். வீட்டில் இருந்த துணிகள், புத்தகங்கள் மற்றும் உடமைகள் கடல் நீரில் நனைந்து சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட மக்கள் அழிக்காலின் மேல் பகுதியிலும், அருகே உள்ள பகுதிகளிலும் வசிக்கும் உறவினர்கள் வீடுகளில் சென்று தஞ்சமடைந்தனர்.

அழக்கால் பகுதியில் ஊருக்குள் புகுந்த கடல்நீர் அருகே உள்ள கடற்கரை கிராமங்கள் வழியாக சென்று பாய்ந்தது. தகவல் அறிந்த நாகர்கோவில் கோட்டாட்சியர் காளீஸ்வரி, ஏஎஸ்பி லலித்குமார், மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்னகுப்பன், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன் மற்றும் அலுவலர்கள் தீயணைப்பு வீரர்கள் அழிக்கால் பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். வீடுகளுக்குள் இருந்தவர்களை பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

கடல்நீர் அழிக்கால் ஊருக்குள் சென்று வீடுகளில் தேங்கிய நிலையில், மக்கள் ஆபத்தின்றி கரைப்பகுதிக்கு வந்தனர். கடல்நீர் புகுந்த வீடுகளில் வசித்த 58 பெண்கள், 12 குழந்தைகள் உட்பட 107 பேர் அருகே உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு நேற்று உணவு உட்பட அடிப்படை வசதியினை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்தது.

அழிக்கால் பிள்ளைத்தோப்பில் ஊருக்குள் கடல் நீர் புகுந்த மீட்பு நடவடிக்கை குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா கூறுகையில்; "கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நேற்று இரவு அழிக்கால் பிள்ளைத்தோப்பு பகுதியில் கடல் சீற்றம் காணப்பட்டது.

கடல் சீற்றத்தினால் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததைத்தொடர்ந்து நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன் மற்றும் மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களை சார்ந்த 37 ஆண்கள், 58 பெண்கள் மற்றும் 12 சிறுவ சிறுமியர்கள் பத்திரமாக மீட்டு பிள்ளைத்தோப்பு வளனார் சமூக நலக்கூடத்திலும், அழிக்கால் சமூகநல கூடத்திலும் பாதுகாப்பாக தங்க வைத்தார்கள். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இன்று பாதிப்புக்குள்ளான அழிக்கால், பிள்ளைதோப்பு பகுதியில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சீரமைப்புப் பணி முடிவுற்றதும் பாதிப்புக்குள்ள மக்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றார். இதைப்போல் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரையிலும் கடல் சீற்றத்தால் கடலோர பகுதியில் இருந்த கடைகள், மற்றும் உபகரணங்கள் சேதமடைந்தன. சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

x