நல்ல திரைப்படங்களை தருபவர்களுக்கு அரசு உதவியாக இருக்கும்: முதல்வர் ரங்கசாமி பேச்சு


புதுச்சேரி: அரசு எப்போதும் குழந்தைகளுக்கான இதுபோன்ற நல்ல திரைப்படங்களை எடுப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

‘ஆட்டிஸம்’ மற்றும் ஒருங்கிணைந்த கல்வி சம்பந்தமான குழந்தைகளுக்கான சமூக அக்கறை கொண்ட திரைப்படம் ‘GLOSED GATES’ (க்ளோஸ்டு கேட்ஸ்). இப்படத்தை நரேஷ்குமார் இயக்கியுள்ளார். நித்யப் பிரியா செல்வராஜ் தயாரித்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டு விழா புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள அலையன்ஸ் பிரான்சிஸ் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, GLOSED GATES படத்தை கண்டுகளித்தார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் வெள்ளைசாமி, அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குநர் லாரன்ட் ஜாலிகஸ், ஒருங்கிணைப்பாளர்கள் கலியன் கந்தசாமி, திருப்பூர் தமிழ் மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: "நடிகர் சிவாஜி கணேசனின் ‘பாசமலர்’ திரைப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது கண்களில் கண்ணீர் வரும் என்று சொல்வார்கள். அதுபோன்று இதயத்தை தொட்ட, கண்களில் கண்ணீரை வரைவழைத்த திரைப்படமாக இப்படம் உள்ளது. இது, ஆழ்ந்த மையக்கருத்துடன் சமூகத்தில் புரட்சியை ஏற்படுத்தும் நல்ல குழந்தைகளுக்கான திரைப்படமாகும். தாய்மார்களுக்கு உதவக்கூடிய, தைரியத்தை கொடுக்கக்கூடிய படமாக இது இருக்கிறது.

புதுச்சேரியை பொறுத்தவரை எப்படிப்பட்ட நிலையிலும் எதையும் நாங்கள் ஏற்றுக்கொண்டு அதனை சரியாகச் செய்கின்ற நிலையில் இருக்கின்றோம். எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் விரைவாக செய்வதில் அரசு அக்கறை கொண்டுள்ளது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்கும்போது குறைபாடுள்ள குழந்தைகளை உயர்த்த முடியும். அவர்களும் தெளிவான நிலைக்கு வர முடியும் என்ற நோக்கத்தில் இந்தப் படத்தை எடுத்திருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது.

லாப நோக்குடன் இல்லாமல் மன தைரியத்துடன் இதுபோன்ற திரைப்படத்தை இயக்குநர் எடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. 24 விருதுகளை பெற்ற இதுபோன்ற திரைப்படங்கள் இன்னும் பல விருதுகளை பெற வேண்டும். ஆட்டிஸம் சம்பந்தமான குழந்தைகளிடம் அன்பு காட்ட, அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். எங்கள் அரசு இதுபோன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு உதவுகின்ற திட்டங்களை கொடுத்து வருகின்றது.

எங்கள் அரசு எப்போதும் குழந்தைகளுக்கான இதுபோன்ற நல்ல திரைப்படங்களை, கருத்துக்களை அளிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். அன்பு, பாசம் என்பது மிக முக்கியமானது. அது எல்லாவற்றையும் வெல்லும் வகையில் இருக்கும். அதனை இந்த திரைப்படம் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளது" என்று முதல்வர் கூறினார்.

x