ராமநாதபுரம்: திருவாடானை தாலுகாவில் தொடர் மழையால் 50 கண்மாய்கள் நிரம்பின. இதில் ஒரு கண்மாய் நிரம்பி உடைப்பு ஏற்பட்டது, 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் திருவாடானை தாலுகாவில் இந்தாண்டு வடகிழக்குப் பருவமழையை எதிர்பார்த்து 26 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். பெரும்பாலும் முளைத்து 15 முதல் 20 நாட்கள் பயிராக உள்ளது.
இத்தாலுகாவில் 89 பொதுப்பணித் துறை கண்மாய்கள், ஒன்றிய மற்றும் முன்னாள் ஜமீன் கண்மாய்கள் என 230 கண்மாய்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர் மழை பெய்ததால், வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்னரே 50 கண்மாய்கள் நிரம்பிவிட்டன. இதில் மாவிலங்கை கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. மேலும் கீழக்கோட்டை கண்மாய் நிரம்பி உடைப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை மற்றும் கண்மாய்கள் நிரம்பியதால் வயல்களில் தண்ணீர் நிரம்பி கோடனூர், கிளியூர், சிறுமலைக்கோட்டை, டி. நாகனி, நெய்வயல், விசும்பூர், கடம்பாகுடி, கல்லூர், திருவடிமிதியூர், அரசூர், அழகமடை, செங்கமடை, ஆதியூர், ஆட்டூர் உள்ளிட்ட வருவாய் கிராமங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் முளைத்த பயிர் தண்ணீரில் மூழ்கியும், பயிர் அரித்தும் சென்றுவிட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர் கூறியதாவது: திருவாடானை தாலுகாவில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் முன்னரே அநேக கண்மாய்கள் நிரம்பி விட்டன. அடுத்து பருவமழை பெய்யத் தொடங்கியதும் பெரும்பாலான கண்மாய்கள் உடைய வாய்ப்புள்ளது. இதனால் நிலங்களில் தண்ணீர் வடிக்க முடியாமல் இப்பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் இளம் நெல் பயிர் நீரில் மூழ்கி அழுகிவிட்டது.
எனவே, பாதிக்கப்பட்ட கிராமங்களை உடனடியாக வேளாண் துறை அலுவலர்கள் பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை அளித்தால், முதல் கட்டமாக விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் திருவாடானையில் வேளாண் உதவி இயக்குநர் பணியிடம் காலியாக உள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அலுவலர்கள் செல்ல தாமதம் ஏற்படுகிறது. இதனால், உதவி இயக்குநர் உள்ளிட்ட காலியாக உள்ள வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். உடைந்த கண்மாய்களை அடைக்கவும், நிரம்பிய கண்மாய்களை பாதுகாக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.