பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு 4-ம் நாளாக தடை


திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டிய வெள்ளம்.

உடுமலை: திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், தொடர்ந்து 4-வது நாளாக நேற்று சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

உடுமலையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நடுவே திருமூர்த்திமலை அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழையால் அங்குள்ள பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவியில்தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், அருவிக்குச் செல்லும்பாதை அடைக்கப்பட்டது. நேற்று 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து அமணலிங்கேஸ்வரர் கோயில் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘கடந்த சில மாதங்களாகவே பஞ்சலிங்க அருவியில் அவ்வப்போது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக அருவியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுகிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால், அருவிக்குச் செல்ல தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் தடைவிதிக்கப்பட்டது. அடிவாரத்தில்உள்ள கோயில் உண்டியல்களுக்குள் வெள்ளநீர் புகாதவாறு, பாலித்தீன் கவர்களால் மூடி வைத்துள்ளோம்’’ என்றனர்.

x