தொடர் மழையால் விலை உயர்வு: சென்னைக்கு தக்காளியை விற்பனைக்கு அனுப்பும் ஓசூர் விவசாயிகள்


ஓசூர்: தொடர் கனமழை மற்றும் ஆந்திர மாநில வரத்துக் குறைவால் சென்னை உள்ளிட்ட பகுதியில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஓசூர் பகுதி விவசாயிகள் சென்னைக்கு அதிக அளவில் தக்காளியை விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை மலர் மற்றும் காய்கறி சாகுபடிக்குக் கைகொடுத்து வருகிறது. இதில், குறிப்பாக சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் காய்கறிகள் ராயக்கோட்டை (தக்காளி சந்தை) மற்றும் ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக, கேரள உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்குச் செல்கின்றன. இந்நிலையில், கடந்த செப்டம்பரில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.70 வரை விற்பனையான நிலையில், உற்பத்தி அதிகரிப்பால் படிப்படியாகத் தக்காளி விலை குறைந்தது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது.

இதனிடையே, தற்போது தமிழகத்துக்கு ஆந்திர மாநில தக்காளி வரத்து குறைந்துள்ளது. மேலும், சென்னையில் அதிகனமழை பெய்து வரும் நிலையில் அங்கு தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஓசூர் பகுதியிலிருந்து அதிக அளவில் தக்காளியை விவசாயிகள் சென்னைக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: ஓசூர் பகுதியில் மற்ற காய்கறிகளை விட 80 சதவீதம் தக்காளி சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறோம். தக்காளி விலையைப் பொறுத்தவரை சந்தைக்கு வரத்து மற்றும் தேவை அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும், வெளிமாநில உற்பத்தியும் தக்காளி விலை நிர்ணயத்துக்கான காரணியாக உள்ளது.

இதனால், ஆண்டு முழுவதும் தக்காளிக்கு நிலையான விலை இருப்பதில்லை. சென்னையில் தற்போது தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், அங்கு ஆந்திர மாநில தக்காளி வரத்து குறைந்து, விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஓசூர் பகுதியிலிருந்து அதிக அளவில் தக்காளியை நேரடியாக வாகனங்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக ஓசூர் உழவர் சந்தை அலுவலர்கள் கூறும்போது, “ஓசூர் பகுதியில் அறுவடை செய்யப்படும் தக்காளி பத்தலப்பள்ளி மற்றும் ராயக்கோட்டை சந்தைகளிலிருந்து கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்குச் செல்லும்.

இதில் சென்னைக்கு 40 சதவீதம் தக்காளி செல்லும். தற்போது, மழை காரணமாகச் சென்னையில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால், ஓசூர் விவசாயிகள் அதிக அளவில் சென்னைக்குத் தக்காளியை விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். இதனால், உள்ளூர் சந்தைக்குத் தக்காளி வரத்து குறைந்துள்ளது” என்றனர்.

x