மழை வெள்ள மீட்பு பணிகளுக்காக வெளியூர் செல்ல மறுக்கும் தூய்மை பணியாளர்கள்


நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்.

திருநெல்வேலி: மழை வெள்ள மீட்பு பணிகளுக்காக வெளியூர் செல்ல மாட்டோம் என நெல்லை தூய்மை பணியாளர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாநகராட்சியில் சுயஉதவிக் குழுக்கள் மூலமாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கான சம்பளத்தை தனியார் நிறுவனம் வழங்கியது, பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைக் கண்டித்து 200-க்கும்மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன், மாநகராட்சி மேயர்கோ.ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, அங்கிருந்து கலைந்து சென்ற பணியாளர்கள் மாநகராட்சி அலுவலர்களை சந்தித்து, சுயஉதவிக் குழு ஒப்பந்த பணியாளர்களாகவே பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தனர். இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் கூறும்போது, “கடந்த மழை வெள்ளத்தின்போது சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டோம். ஆனால், எங்களைதற்போது தனியார் நிறுவனப்பணியாளர்களாக வகைப்படுத்திஉள்ளனர். இது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இனி சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்குச் சென்று பணியாற்ற மாட்டோம். குப்பை அள்ளுவதை தவிர,வேறு எந்த பணியையும் மேற்கொள்ள மாட்டோம். மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி நாளொன்றுக்கு ரூ.520 கூலி வழங்க வேண்டும்” என்றனர். சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், வெளியூர் சென்று பணியாற்ற மாட்டோம் என்று தூய்மைப் பணியாளர்கள் மறுப்புத் தெரிவித்திருப்பது, நெல்லை மாநகராட்சி அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

x